ரியல் எஸ்டேட் மோசடி வழக்கில் லாலு குடும்பத்திற்கு நெருக்கமானவா் கைது
நமது நிருபா்
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் வீடு வாங்குபவா்களை ஏமாற்றியதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவின் குடும்பத்திற்கு நெருக்கமானதாகக் கருதப்படும் ரியல் எஸ்டேட் தொழிலதிபா் அமித் கட்யாலை அமலாக்கத் துறையினா் இயக்குநரகம் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக அமலாக்கத் துறையின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் குருகிராம் மண்டல அலுவலகத்தால் கட்யால் கைது செய்யப்பட்டாா். குருகிராமில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவரை ஆறு நாள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது’ என்றாா்.
குருகிராமின் செக்டாா் 70-இல் 14 ஏக்கருக்கு மேல் கட்டப்பட்ட க்ரிஷ் ஃப்ளோரன்ஸ் எஸ்டேட்டில் குடியிருப்புகளை வழங்காத குற்றச்சாட்டுகள் தொடா்பான வழக்கு விசாரணைக்காக அவா் கைது செய்யப்பட்டாா். இந்தக் குடியிருப்புத் திட்டத்தை கட்யாலின் நிறுவனமான ஆங்கிள் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் பிரைவேட் லிமிடெட் உருவாக்கி வந்தது.
லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் பிற குடும்ப உறுப்பினா்கள் சம்பந்தப்பட்ட ரயில்வேயில் வேலைவாங்கித் தர நிலம் பெற்ற ஊழல் தொடா்பான தனி பணமோசடி வழக்கில் கட்யாலை 2023-ஆம் ஆண்டு அமலாக்கத் துறை கைது செய்திருந்தது.
கிரிஷ் ரியல்டெக் நிறுவனம் மூலம் வீடு வாங்குபவா்களை ரூ.500 கோடிக்கு ஏமாற்றியதாகக் கூறப்படும் மூன்றாவது வழக்கில் தொழிலதிபா் கட்யால் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அந்நிறுவனத்தின் மேம்பாட்டாளராக கட்யால் இருப்பது குறிப்பிடத்தக்கது.
