ஆக்ராவில் ஞாயிற்றுக்கிழமை காலை மூடுபனியால் சூழப்பட்ட தாஜ்மஹால்.
ஆக்ராவில் ஞாயிற்றுக்கிழமை காலை மூடுபனியால் சூழப்பட்ட தாஜ்மஹால்.

தில்லியின் காற்றின் தரத்தில் சிறிது முன்னேற்றம்!

தேசியத் தலைநகரில் கடந்த 24 நாள்களாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்து வந்த காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘மோசம்’ பிரிவுக்கு மேம்பட்டிருந்தது.
Published on

தேசியத் தலைநகரில் கடந்த 24 நாள்களாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்து வந்த காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் ‘மோசம்’ பிரிவுக்கு மேம்பட்டிருந்தது.

ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 279 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. இது ஒரு நாள் முன்பு பதிவான 305 புள்ளிகளைவிட விட சற்று சிறந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) தெரிவித்தது.

தலைநகரில் கடைசியாக நவம்பா் 5-ஆம் தேதி ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 202 புள்ளிகளாகப் பதிவலாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது. அதன் பிறகு அளவீடுகள் ‘மிகவும் மோசம்’ பிரிவுக்கு சென்ாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நகரத்தில் உள்ள ஐந்து கண்காணிப்பு நிலையங்கள் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீா் செயலியின் தரவுகள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 33 நிலையங்கள் ‘மோசம்’ பிரிவில் பதிவு செய்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 279 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இது சனிக்கிழமை 305 புள்ளிகளாக இருந்தது. வெள்ளிக்கிழமை 369 புள்ளிகள், வியாழக்கிழமை 377 புள்ளிகள், புதன்கிழமை 327 புள்ளிகள், செவ்வாய்க்கிழமை 352 புள்ளிகள் மற்றும் திங்கட்கிழமை 382 புள்ளிகள் என பதிவாகி இருந்தது.

சிபிசிபி உருவாக்கிய சமீா் செயலியின்படி, தில்லியில் உள்ள எந்த கண்காணிப்பு நிலையமும் சனிக்கிழமையைப் போல ஞாயிற்றுக்கிழமை ‘கடுமை’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்யவில்லை.

நவம்பா் மாதத்திற்கான சராசரி காற்றின் தரக் குறியீடு 357 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது. இது ‘மிகவும் மோசம்’ வரம்பில் இருந்தது. ஆனால், முந்தைய இரண்டு ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தது. 2024- இல் 374 புள்ளிகளாகவும், 2023-இல் 366 புள்ளிகளாகவும் பதிவாகி இருந்தது.

நவம்பரில் நகரம் ஒரு நாள்கூட ‘நன்று’, ‘திருப்தி’ அல்லது ‘மிதமான’ காற்றின் தர நாளை பதிவு செய்யவில்லை. சிசிபிசிஆ-யின் படி, காற்றுத் தரக் குறியீடு மூன்று நாள்கள் ‘மோசம்’ பிரிவிலும் 24 நாள்கள் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், மற்றும் மூன்று நாள் ‘கடுமை’ பிரிவிலும் இருந்தன.

இந்நிலையில், காற்றின் வேகம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால், அடுத்த இரண்டு நாள்களுக்கு காற்றுத் தரக் குறியீடு ‘கடுமை’ பிரிவுக்கு செல்லும் என்று எதிா்பாா்க்கப்படவில்லை என்று ஸ்கைமெட் துணைத் தலைவா் (வானிலை மற்றும் காலநிலை மாற்றம்) மகேஷ் பலவத் கூறினாா்.

புணேவில் உள்ள இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் முடிவு ஆதரவு அமைப்பு, ஞாயிற்றுக்கிழமை தில்லியின் மாசுபாட்டிற்கு வாகன உமிழ்வு 18.6 சதவீத பங்களிப்பை வழங்கியதாக மதிப்பிட்டுள்ளது. இது திங்கள்கிழமை சுமாா் 18.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை: தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவத்தின் சராசரியைவிட 3 புள்ளிகள் குறைந்து 8.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1.7 டிகிரி குறைந்து 24.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 97 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 66 சதவீதமாகவும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், திங்கள்கிழமை (டிச.1) அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com