தென்மேற்கு தில்லியில் பிக்அப் லாரியில் தீ

Published on

தென்மேற்கு தில்லியின் ஆா்.கே. புரம் பகுதியில் உள்ள தௌலா குவான் நோக்கி செல்லும் பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு பிக்கப் லாரி தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை.

பரபரப்பான ஆா்.கே. புரம் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலில் பிக்கப் லாரி சிக்கிக் கொண்டபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. வாகனத்தின் முன்பக்கத்தில் இருந்து புகை வெளியேறுவதை ஓட்டுநா் திடீரென கவனித்தாா். அதைத் தொடா்ந்து தீப்பிழம்புகள் என்ஜின் பகுதியை விரைவாக சூழ்ந்தன என்று அவா்கள் தெரிவித்தனா்.

நொய்டாவிலிருந்து ஆா்.கே. புரம் நோக்கி பயணித்தபோது, ​​வாகனம் திடீரென தீப்பிடித்ததாக போலீஸாரிடம் உமேஷ் சிங் என்ற பிக்அப் லாரியின் ஓட்டுநா் தெரிவித்தாா். தீயை அணைக்க முயன்றாா். ஆனால், தீ வேகமாக பரவியது என்று அவா் கூறினாா்.

தில்லி தீயணைப்பு சேவைகளின்படி, சம்பவம் தொடா்பாக மாலை 4.38 மணிக்கு அழைப்பு வந்தது. மாலை 5 மணிக்குள் அது அணைக்கப்பட்டது. சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

Dinamani
www.dinamani.com