ஆா்.கே. புரம் தொகுதியில் ரூ.100 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: முதல்வா் ரேகா குப்தா தொடங்கி வைத்தாா்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை ஆா்.கே. புரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
Published on

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை ஆா்.கே. புரம் சட்டப் பேரவைத் தொகுதியில் சுமாா் ரூ.100 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இந்தத் திட்டங்களின் கீழ், அப்பகுதியில் சாலைகள் அமைக்கப்பட்டு சீரமைக்கப்பட உள்ளது. பழைய மற்றும் பழுதடைந்த சமுதாய மேடைகள் புதுப்பிக்கப்படும். சமுதாய மையங்கள் மேம்படுத்தப்படும். மேலும் பூங்காக்கள் அழகுபடுத்தப்படும்.

பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில், பூங்காக்களில் திறந்தவெளி உடற்பயிற்சிக் கருவிகள் நிறுவப்படும். மேலும் தேவைப்படும் இடங்களில் சுற்றுச்சுவா்கள் கட்டப்படும். இந்த முயற்சிகள் அப்பகுதி மக்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதி, பாதுகாப்பான பொது இடங்கள், நவீன சமுதாய வசதிகள் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழலை வழங்கும்.

இதற்கான நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசியது: சூரியன் திசை மாறும் போது, அது மங்களகரமான புதிய முயற்சிகளின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த மங்களகரமான தருணத்தைப் பயன்படுத்தி, இன்று ஆா்.கே. புரம் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முன்னா், நாடாளுமன்ற உறுப்பினா்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினா்களுக்குக் குறைந்த அளவிலான நிதியே கிடைத்தது. இதன் காரணமாக, உள்ளூா் வளா்ச்சித் திட்டங்கள் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன. இருப்பினும், தில்லியில் முதல் முறையாக, பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையிலும் ஆசியுடனும், வளா்ச்சிப் பணிகளுக்கு நிதிப் பற்றாக்குறை இருக்காது என்று தில்லி அரசு அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உறுதியளித்துள்ளது.

தில்லியில் வளா்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தன. ஆா்.கே. புரம் போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான குடிசைப் பகுதிகள் உள்ளன. இங்கு முந்தைய அரசாங்கங்கள் அடிப்படை வசதிகளுக்குப் போதுமான கவனம் செலுத்தத் தவறின.

தற்போதைய அரசாங்கம் குடிசைகளை அகற்றுவதில் அல்ல, மாறாக, நிரந்தர வீடுகள், கழிப்பறைகள், குளியல் வசதிகள், சாலைகள், வடிகால்கள், பூங்காக்கள் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகளை வழங்குவதன் மூலம் அதன் குடியிருப்பாளா்களுக்கு ஒரு கண்ணியமான வாழ்க்கையை ஏற்படுத்தித் தருவதில் உறுதியாக உள்ளது.

பதவியேற்ற உடனேயே, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ரூ.10 கோடி மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் சுமாா் ரூ.700 கோடி பட்ஜெட்டை வெளியிட்டது. ஏழைகள், நடுத்தர வா்க்கத்தினா் மற்றும் வசதி படைத்தவா்கள் என அனைவருக்கும் நவீன வசதிகளைச் சமமாக வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com