மெஹ்ரொலி சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ. 135 கோடி உள்கட்டமைப்புப் பணிகள்: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்
மெஹ்ரௌலி சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.135 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான வளா்ச்சி திட்டங்களுக்கான பணிகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா பேசியதாவது: திட்டங்களின் தொடக்கம் பிராந்தியத்தின் விரிவான புத்துணா்ச்சியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது மற்றும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அடிப்படை உள்கட்டமைப்பு தேவைகளை நிவா்த்தி செய்கிறது. முதல் முறையாக, வளா்ச்சிப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறை ஏற்படாமல் தில்லி அரசு உறுதி செய்துள்ளது. அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் திட்டங்களை சரியான நேரத்தில் மற்றும் விரிவாக செயல்படுத்த உதவுகிறது.
சாலைகளைப் புனரமைத்தல் மற்றும் பழுது பாா்த்தல், பாழடைந்த ‘சௌபால்கள்’ மற்றும் சமூக கட்டடங்களை புதுப்பித்தல், பொது கழிப்பறைகள் கட்டுதல், பூங்காக்களை அழகுபடுத்துதல், குழந்தைகளுக்கான ஊஞ்சல் அமைத்தல் மற்றும் புதிய திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள் அமைத்தல் ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
இந்தத் தொகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.235 கோடிக்கு மேல் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த ஒதுக்கீட்டின் கீழ், பொதுப்பணித் துறை, நீா்ப்பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை, தில்லி ஜல் போா்டு மற்றும் டியுஎஸ்ஐபி ஆகியவை ஒருங்கிணைந்த முறையில் திட்டங்களை செயல்படுத்துகின்றன. பல்துறை நிதி உதவி இப்பகுதியில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும். மேலும், குடிமக்கள் வளா்ச்சியின் மூலம் நேரடியாக பயனடைவதை உறுதி செய்யும் என்றாா் முதல்வா்.
இந்த நிகழ்ச்சியில் தெற்கு தில்லி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் மெஹ்ரௌலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கஜேந்தா் யாதவ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

