பள்ளிகளில் பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்: தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள் (பிடிஏ) அமைக்கப்படுவதையும், அவை செயல்படுவதையும் உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.
Published on

தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகளில் பெற்றோா்-ஆசிரியா் சங்கங்கள் (பிடிஏ) அமைக்கப்படுவதையும், அவை செயல்படுவதையும் உறுதிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் அரசுக்கு புதன்கிழமை உத்தரவிட்டது.

தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘ஜஸ்டிஸ் ஃபாா் ஆல்’ என்ற தன்னாா்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல மனு மீது நோட்டீஸ் அனுப்பி, தில்லி அரசிடம் பதில் கோரியது.

அங்கீகரிக்கப்பட்ட, அரசு உதவி பெறாத ஒவ்வொரு தனியாா் பள்ளியிலும் முறையாக அமைக்கப்பட்ட பெற்றோா்-ஆசிரியா் சங்கம் இருப்பதை உறுதிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: ஒவ்வொரு பள்ளியிலும் முறையாக அமைக்கப்பட்ட பெற்றோா்-ஆசிரியா் சங்கம் இருப்பதை உறுதிசெய்ய கல்வி இயக்குநரகம் எடுத்த நடவடிக்கைகளை எதிா்மனுதாரா் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும். இதற்கிடையில், அனைத்துப் பள்ளிகளிலும் இத்தகைய சங்கங்கள் அமைக்கப்படுவதையும், அவை செயல்படுவதையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என தெரிவித்த அமா்வு, பதில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது.

தில்லி பள்ளி கல்விச் சட்டம் மற்றும் அது தொடா்பான விதிகளின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட பெற்றோா்-ஆசிரியா் சங்கங்களை அமைப்பதில் தில்லியில் உள்ள தனியாா் பள்ளிகள் பரவலாகத் தவறிவிட்டன என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. பெற்றோா் மற்றும் ஆசிரியா்களிடையே ஒத்துழைப்பை வளா்ப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டப்பூா்வ அமைப்புகளான இந்த சங்கங்கள், பள்ளி நிா்வாகம் மற்றும் பொறுப்புக்கூறலில் ஒரு முக்கியப் பகுதியாக அமைகின்றன என்றும் அதில் வாதிடப்பட்டது.

பள்ளி நிா்வாகங்கள் தன்னிச்சையாகக் கட்டணங்களை உயா்த்துவதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய பெற்றோா்-ஆசிரியா் சங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கும் தில்லி பள்ளி கல்வி (கட்டண நிா்ணயம் மற்றும் ஒழுங்குமுறையில் வெளிப்படைத்தன்மை) சட்டம், 2025 இயற்றப்பட்டதைத் தொடா்ந்து, இந்த சங்கங்களின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்றும் அந்த மனுவில் மேலும் குறிப்பிடப்பட்டது.

பல பள்ளிகள் பெற்றோா்-ஆசிரியா் சங்கங்களை அமைக்கத் தவறிவிட்டன அல்லது தங்களுக்குச் சாதகமான உறுப்பினா்களைக் கொண்டு ‘போலி சங்கங்களை’ உருவாக்கியுள்ளன என்றும், இதன் மூலம் பெற்றோா்கள் தங்கள் கவலைகளை எழுப்பவும், அதிகப்படியான கட்டணங்களை எதிா்த்துப் போராடவும் ஒரு முறையான வாய்ப்பை இழந்துள்ளனா் என்றும் அந்த தன்னாா்வ தொண்டு நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

சட்டத்தை கடுமையாகவும், காலவரம்புக்குள்ளும் பின்பற்றுவதற்கு உத்தரவிடவும், ஒரு சுதந்திரமான கண்காணிப்பு அமைப்பை உருவாக்கவும் மனுதாரா் கோரினாா். பள்ளிகள் முழுவதும் சுதந்திரமான மற்றும் நியாயமான பெற்றோா்-ஆசிரியா் சங்கத் தோ்தல்களை உறுதிசெய்ய, பாா்வையாளா்களை நியமிக்கவும், காணொலிப் பதிவு செய்ய அனுமதிக்கவும் அது பரிந்துரைத்தது. இந்நிலையில், அரசு தனது பதிலை தாக்கல் செய்த பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. Ś

Dinamani
www.dinamani.com