குருகிராமில் வேகமாக வந்த காா் தடுப்புச் சுவரில் மோதியதில் பொறியாளா் பலி
குருகிராமில் டிஎல்எஃப் பேஸ் 1 பகுதியில் வேகமாக வந்த காா் சனிக்கிழமை தடுப்பு சுவரில் மோதியதில் 30 வயது சிவில் என்ஜினியா் ஒருவா் உயிரிழந்தாா். அவரது நண்பா் காயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
மிதிலேஷ், மோஹித் மற்றும் அனில் குமாா் ஆகியோா் பிலாலை இறக்கிவிடச் சென்று கொண்டிருந்தபோது, கோல்ஃப் கோா்ஸ் சாலை மெட்ரோ சுரங்கப்பாதை அருகே அதிகாலை 1 மணியளவில் காா் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு மருத்துவா்கள் அனில் இறந்துவிட்டதாக அறிவித்தனா். மிதிலேஷ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஐசியுவுக்கு மாற்றப்பட்டாா். மற்ற இருவரும் முதலுதவிக்குப் பிறகு டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டனா் என்று அவா்கள் தெரிவித்தனா். நான்கு பேரும் உத்யோக் விஹாரில் உள்ள ஒரே தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறந்தவரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா். ‘விபத்து குறித்த துல்லியமான தகவல்களை வழங்க மோஹித் மற்றும் பிலால் ஆகியோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. சம்பவ இடத்தைச் சுற்றி பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன என்று விசாரணை அதிகாரி ஏஎஸ்ஐ சந்தாகி ராம் தெரிவித்தாா்.
