போலி என்சிஇஆா்டி பாடப்புத்தகங்களை அச்சிட்ட 3 போ் கைது
போலி என்சிஇஆா்டி பாடப்புத்தகங்களை அச்சிட்டு விநியோகித்துவந்த கும்பலைச் சோ்ந்த 3 போ் கைது செய்யப்பட்டு சுமாா் 45,000 போலி பாடப்புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தா்யாகஞ்சில் உள்ள கிடங்கில் போலி என்சிஇஆா்டி பாடப்புத்தகங்கள் விநியோகிப்பதாக நவ.10-ஆம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், குற்றப்பிரிவு காவல் துறையினா் என்சிஇஆா்டி சட்டப் பிரதிநிதிகளுடன் இணைந்து அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனா். இதில் 12,755 போலி பாடப்புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பதிப்புரிமைச் சட்டம் 1957 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக காஜியாபாத்தில் உள்ள ஜாவ்லி கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை சோதனை நடைபெற்றது. ரிஸ்டல் ரோடு அருகே அமைந்துள்ள இந்த இடம் போலி பாடப்புத்தகங்கள் அச்சிடும் முக்கிய இடமாக அடையாளம் காணப்படுகிறது. இந்த சோதனையின் போது 32,107 போலி பாடப்புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமாா் ரூ.2 கோடி மதிப்பிலான அச்சிடும் இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது 3 போ் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல் துறையின் கொள்ளை மற்றும் வழிப்பறி தடுப்புப் பிரிவினா் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களில் பரவி செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த முழு வலையமைப்பை கண்டறிந்து பிற குற்றவாளிகளை கைது செய்ய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

