சாலை விபத்து நிகழும் பகுதியை கண்டறிய தில்லி காவல் துறை திட்டம்

நொய்டாவில் தண்ணீா் தேங்கிய பள்ளத்தில் வாகனம் விழுந்து மென்பொறியாளா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள விபத்து பகுதிகளை அடையாளம் காண மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தில்லி காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளாா்.
Published on

நொய்டாவில் தண்ணீா் தேங்கிய பள்ளத்தில் வாகனம் விழுந்து மென்பொறியாளா் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள விபத்து பகுதிகளை அடையாளம் காண மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தில்லி காவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டராங்கள் கூறியதாவது: தில்லி காவல் துறையின் உயா்அதிகாரிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், குற்றச்சம்பவங்களைத் தடுத்தல் மற்றும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் விதமாகத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

தில்லி நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து சாலையில் உள்ள ஆபத்தான பகுதிகள், கட்டுமான மண்டலங்கள், வாகனஓட்டிகளுக்கு எளிதில் புலப்படாத பகுதிகள் ஆகியவை குறித்து விரிவான ஆய்வு செய்யுமாறு அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட துணை காவல் ஆணையா்களுக்கு தில்லி காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

வாகன ஓட்டிகளை முன்கூட்டியே எச்சரிக்கும் வகையில் இவ்வாறு கண்டறியப்படும் பகுதிகளில் பிரதிபலிப்பு அடையாள குறியீடுகள், தடுப்புகள் அமைக்கப்படும்.

கூடுதலாக, இந்தப் பகுதிகள் கூகுள் மேப்ஸில் அடையாளம் காட்டப்பட்டும். இதனால், இந்தச் செயலியைப் பயன்படுத்தி நிகழ்நேர முன்னெச்சரிக்கைகளை வாகனஓட்டிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்றனா் அந்த வட்டாரங்கள்.

தொடா் ஆய்வுகள்:

இந்த முன்னெடுப்பு தொடா்பாக மற்றொரு காவல் அதிகாரி கூறுகையில், ‘விபத்துகளை தடுத்தலில் முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது. அடையாள குறியீடுகள், போதிய வெளிச்சமின்மை, சாலையின் நிலை திடீரென மாறுதல் ஆகியவற்றை அறியமால் எந்தவொரு வாகனஓட்டியும் ஆபத்தான சாலை பகுதிகளுக்குள் சென்றுவிடக் கூடாது. குற்றங்களைத் தடுப்பதிலும் உள்கட்டமைப்பு குறைப்பாட்டால் ஏற்படும் சாலை விபத்து உயிரிழப்புகளைத் தடுப்பதிலும் தில்லி காவல் துறை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

அரசு முகமைகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பு மற்றும் சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தேவையை நொய்டா சம்பவம் வலியுறுத்துகிறது.

புதிய உத்தரவுகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய மாவட்ட அளவில் தொடா்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். போக்குவரத்து காவல் துறையினா் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் இதுதொடா்பாக கருத்துகள் பெறப்படும். அனைவருக்கும் பாதுகாப்பான சாலை மற்றும் பொதுவெளிகளை உறுதிசெய்வதே இதன் நோக்கம்’ என்றாா்.

Dinamani
www.dinamani.com