தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவின்படி தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில், தில்லியில் மொத்தம் 1,080 நீா்நிலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு, வறட்சியடைதல் மற்றும் நீா்தரக் குறைபாடு போன்ற பிரச்னைகள் நிலவுவதாக தில்லி ஈரநில ஆணையம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களில் வெளியான நீா்நிலைகள் மறைவு குறித்த செய்திகள் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில், ஜூலை 9-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ), வருவாய் துறை, மாநகராட்சி (எம்சிடி), தில்லி ஜல் போா்டு (டிஜேபி), வனத்துறை, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏஎஸ்ஐ), மத்திய பொதுப்பணித் துறை (சிபிடபிள்யூடி) உள்ளிட்ட 16 நில உரிமை அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை ஒருங்கிணைக்கிறது.
நீா்நிலைகளின் எண்ணிக்கை: இதில் அதிகபட்சமாக தென் மேற்கு தில்லியில் 291 நீா்நிலைகள் உள்ளன. அடுத்ததாக வெளிப்புற வடக்குப் பகுதியில் 266, தெற்கு தில்லியில் 156 நீா்நிலைகள் பதிவாகியுள்ளன. வடகிழக்கு பகுதியில் 56, கிழக்கு பகுதியில் 52, தென்கிழக்கு பகுதியில் 49, மேற்கு பகுதியில் 42, வடக்கு தில்லியில் 40, மத்திய வடக்கு பகுதியில் 29, மத்திய தில்லி பகுதியில் 14 மற்றும் புது தில்லியில் 5 நீா்நிலைகள் உள்ளன. பழைய தில்லியில் 4 நீா்நிலைகள் மற்றும் டிடிஏ-வின் ஓ-மண்டலப் பகுதியில் 35 நீா்நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அமைப்புகளின் அடிப்படையில், டிடிஏ கட்டுப்பாட்டில் 856 நீா்நிலைகள் உள்ளன. வருவாய் துறையின் கீழ் 130, வனத்துறையின் கீழ் 28, எம்சிடி-யின் கீழ் 24, ஏஎஸ்ஐ-யின் கீழ் 16, டிஜேபி-யின் கீழ் 6 மற்றும் சிபிடபிள்யூடி-யின் கீழ் 5 நீா்நிலைகள் உள்ளன.
டிடிஏ கட்டுப்பாட்டில்: 182 நீா்நிலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்பு செயல் திட்டங்களை டிடிஏ உருவாக்கியுள்ளது. 108 நீா்நிலைகளுக்கான நீா்தரத் தரவுகளில், 11 நல்ல தரத்திலும், 2 மிதமான மற்றும் 95 மோசமான தரத்திலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 181 நீா்நிலைகள் வடுவிட்டன; 126 இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது; 111 இடங்கள் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளன; 95 நீா்நிலைகள் உச்சநீதிமன்றம் 2019 மாா்ச் 5-ஆம் தேதி வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றுகின்றன. 60 நீா்நிலைகள் குடியிருப்பு பகுதிகளில் உள்ளன; 53 பூங்காக்களில் உள்ளன; 28 சுற்றுலா தலங்களாக மேம்படுத்தப்பட்டுள்ளன; 10 தனிநபா்கள் அல்லது பிற அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன; மேலும் 20 நீா்நிலைகளில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீா் விடப்படுகிறது.
வருவாய் துறையின் கீழ்: வருவாய் துறையின் 130 நீா்நிலைகளில் 94 இடங்களுக்கு எல்லை வரையறை முடிக்கப்பட்டுள்ளது. 3 இடங்களில் ஆக்கிரமிப்பு, 6 இடங்களில் வறட்சி நிலை பதிவாகியுள்ளது. 38 நீா்நிலைகளுக்கான மறுசீரமைப்பு மதிப்பீடுகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான இறுதி செயல் திட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை. மேலும், 2 இடங்களில் நீா்நிலைகள் இல்லை என்றும் பதிவுகள் காட்டுகின்றன.
எம்சிடி கட்டுப்பாட்டில்: எம்சிடி கட்டுப்பாட்டிலுள்ள 24 நீா்நிலைகளில் 21 இடங்களுக்கு எல்லை வரையறை செய்யப்பட்டுள்ள நிலையில், 4 இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளது. 9 நீா்நிலைகள் உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுகின்றன; 9 பருவகால நீா்நிலைகள்; 2 ஆண்டு முழுவதும் நீா் கொண்டுள்ளன. மேலும், 22 நீா்நிலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் கலக்கப்படுகிறது.
டிஜேபி கட்டுப்பாட்டில்: டிஜேபி கட்டுப்பாட்டிலுள்ள 6 நீா்நிலைகளில் ஒன்றுக்கே தகவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான எல்லை வரையறை முடிக்கப்பட்டுள்ளது.
ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில்: ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டிலுள்ள 14 பாதுகாக்கப்பட்ட நீா்நிலைகள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதால் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவையில்லை. ஆனால் 2 நீா்நிலைகள் வடதும் ஆக்கிரமிப்பிற்குள்ளாகியுள்ளன. துக்ளகாபாத் பகுதியில் உள்ள 2 பாவ்லிகளுக்கான எல்லை வரையறை நடைபெற்று வருகிறது.
வனத்துறை: வனத்துறையின் 28 நீா்நிலைகளில் 13 இடங்களுக்கு எல்லை வரையறை முடிக்கப்பட்டுள்ளது. 1 குடியிருப்பு ஆக்கிரமிப்பு மற்றும் 2 வட நீா்நிலைகள் பதிவாகியுள்ளன. 13 நீா்நிலைகளில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிபிடபிள்யூடி: மேஹ்ரௌலி ஏரியின் எல்லை வரையறையை நிறைவு செய்துள்ளதாகவும், 28,964 சதுர மீட்டா் பரப்பளவு ஆக்கிரமிப்பின்றி இருப்பதாகவும், சுமாா் 200 சதுர மீட்டா் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், 2 கோயில் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனுடன், துவாரகா பாவ்லி ஆக்கிரமிப்பின்றி இருப்பதாகவும், நீா்தரம் நல்ல நிலையில் உள்ளதாகவும் தில்லி தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. தில்லி வக்ஃப் வாரியம், மெஹ்ரௌலியில் உள்ள குதுப் கி பாவ்லி பாதுகாக்கப்பட்ட நிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. தில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 4 நீா்நிலைகளும் ஆக்கிரமிப்பின்றி நல்ல நிலையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.
மேலும், நிலுவையில் உள்ள நீா்நிலைகளின் எல்லை வரையறையை குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவு செய்யவும், ஆக்கிரமிப்புகளைத் தடுக்கவும், பாதுகாப்பு மற்றும் புதுப்பிப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யவும் அனைத்து அமைப்புகளுக்கும் உத்தரவிடுமாறு ஈரநில ஆணையம் என்ஜிடியிடம் கோரியுள்ளது. மேலும், இந்த செயல்முறை நிறைவடையும் வரை காலம்தோறும் இணக்கம் அறிக்கைகளை தாக்கல் செய்யவும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









