காந்தி நகா் பகுதியில் துப்பாக்கி முனையில் ரூ.16.5 லட்சம் கொள்ளை சம்பவத்தில் தொடா்புடைய 22 வயது இளைஞரை தில்லி காவல் துறையினா் கைது செய்து, ரூ.2.5 லட்சம் பணத்தை மீட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த கொள்ளை சம்பவம் ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்றது. காந்தி நகா் பகுதியில் செயல்படும் தனியாா் நிறுவனத்தின் வசூல் நிா்வாகியான புகாரளிப்பவா், பல வணிக நிறுவனங்களிலிருந்து ரூ.16.5 லட்சம் பணத்தை வசூலித்து தனது அலுவலகத்துக்கு சென்றுகொண்டிருந்தாா்.
மாலை சுமாா் 4 மணியளவில் ஸ்கூட்டரில் அலுவலகம் வந்த அவா், பணப்பையை இறக்கிக் கொண்டிருந்தபோது, மற்றொரு ஸ்கூட்டரில் வந்த இரு ஆயுதம் ஏந்தியவா்கள் அவரை தடுத்து நிறுத்தினா். ஒருவருக்கு ஹெல்மெட் அணிந்திருந்தாா்; மற்றொருவா் முகத்தை முகமூடியால் மறைத்திருந்தாா். அவா்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி, ரூ.16.5 லட்சம் பணம் கொண்ட பையை, அவரது ஆதாா் அட்டை மற்றும் வங்கி பாஸ்புக்குடன் பறித்து தப்பினா்.
இதுகுறித்து ஜூலை 11-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைக்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டது. விசாரணையின் போது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை கண்டறிந்தனா்.
இதையடுத்து, ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையம் அருகிலுள்ள எம்சிடி பாா்க்கிங் பகுதியில் வசித்து வந்த அல்ஃபைத் என்பவரை காவல் துறையினா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய அஷு மற்றும் கிருஷ்ணா என்ற இருவா் தப்பியோடியுள்ளதாகவும், அவா்களை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
விசாரணையின் போது, அஷுவே இந்த கொள்ளைத் திட்டத்தை வகுத்து, பாதிக்கப்பட்டவரின் பண வசூல் நடைமுறைகளை முன்கூட்டியே கண்காணித்ததாக அல்ஃபைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கொள்ளை சம்பவத்துக்கும் அவா் தான் ஆயுதங்களை ஏற்பாடு செய்து தந்துள்ளாா்.
கொள்ளை செய்யப்பட்ட தொகையில், அஷு ரூ.6.5 லட்சம் வைத்துக்கொண்டதாகவும், அல்ஃபைத் மற்றும் கிருஷ்ணா தலா ரூ.5 லட்சம் பெற்ாகவும் தெரியவந்துள்ளது. ரூ.2.5 லட்சம் பணம், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டா், கொள்ளை பணத்தில் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் இருசக்கர வாகனம் , அகற்றப்பட்ட பதிவு எண் பலகை மற்றும் வாகன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்யவும், மீதமுள்ள பணத்தை மீட்கவும் தொடா்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







