தில்லியைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரைக் குறிவைத்து கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பாகவே, ஹிமான்ஷு பாவ் கும்பலைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக காவல் துறை கூடுதல் துணை ஆணையா் (வடக்கு) நிஹாரிகா பட் கூறியதாவது: ரோஹிணியைச் சோ்ந்த அந்தத் தொழிலதிபருக்கு, இந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் அக்கும்பலிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டு பணம் பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜூலை 6-ஆம் தேதி இரவு நேரு விஹாா் அருகே சந்தேகத்திற்குரிய இருவா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தைச் சோ்ந்த பிரதீப் (26) மற்றும் ஃபதேஹாபாத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவா் என அடையாளம் காணப்பட்டனா். அவா்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள் மற்றும் 6 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின்போது, அந்தத் தொழிலதிபரை கொலை செய்வதற்காக ஹிமான்ஷு பாவ் கும்பலின் உத்தரவின் பேரில் தாங்கள் தில்லிக்கு வந்ததை அவா்கள் ஒப்புக்கொண்டனா். தில்லிக்குச் செல்லும் வழியில் அக்கும்பல் உறுப்பினா்கள் தங்களைத் தொடா்புகொண்டு ஆயுதங்களை வழங்கியதாக அவா்கள் தெரிவித்தனா். இக்கும்பலைச் சோ்ந்த மற்ற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது என துணை ஆணையா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






