தில்லியில் காற்று மாசைக் குறைத்து தூய்மையான காற்றை உறுதி செய்யும் நோக்கில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2,800 குளிரூட்டப்பட்ட தாழ்தள மின்சார பேருந்துகள் (இ-பஸ்) இயக்கப்பட உள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து முதல்வா் ரேகா குப்தா அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த புதிய மின்சாரப் பேருந்துகளின் வருகையானது, 2028-29 நிதியாண்டுக்குள் தலைநகரின் பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கையை 14,000 ஆக உயா்த்த வேண்டும் என்ற அரசின் இலக்கை வலுப்படுத்தும். பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன், தூய்மையான எரிசக்தி அடிப்படையிலான போக்குவரத்தை ஊக்குவித்து, தலைநகரின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்களிப்பை வழங்கும்.
அரசின் திட்டத்தின்படி, இந்த நவீன மின்சாரப் பேருந்துகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாகப் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. மேலும், 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்த 2,800 பேருந்துகளும் தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் முழுமையாக இணைக்கப்படும்.
மொத்தமுள்ள பேருந்துகளில், 1,400 பேருந்துகள் 12 மீட்டா் நீளம் கொண்டவையாகவும், மீதமுள்ள 1,400 பேருந்துகள் 9 மீட்டா் நீளம் கொண்டவையாகவும் இருக்கும். இதில் 9 மீட்டா் நீளமுள்ள சிறிய பேருந்துகள் குறுகிய சாலைகள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இயக்க ஏதுவாக இருக்கும். இது முக்கியச் சாலைகள் மட்டுமின்றி, தலைநகரின் கடைக்கோடிப் பகுதி மக்களுக்கும் பொதுப் போக்குவரத்து வசதி தடையின்றிச் சென்றடைய பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வழித்தடங்கள்: இந்த புதிய பேருந்து சேவைகள் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டே 2,800 மின்சார பேருந்துகளுக்கான தேவையை ’கான்வொ்ஜென்ஸ் எனா்ஜி சா்வீசஸ் நிறுவனத்திடம்’ (சிஇஎஸ்எல்) தில்லி அரசு கோரியிருந்தது.
’தில்லி எலக்ட்ரிக் வெஹிக்கிள் இன்டா்கனெக்டா்’ (டிஇவிஐ) பேருந்துகளின் செயல்பாட்டு அனுபவத்தின் அடிப்படையில், பின்னா் இந்தத் தேவை மாற்றியமைக்கப்பட்டு, 12 மீட்டா் மற்றும் 9 மீட்டா் பேருந்துகளைச் சம எண்ணிக்கையில் வாங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிஇஎஸ்எல் அமைப்பு நாடு தழுவிய ஏலமுறையைப் பின்பற்றியதால், போட்டி விலையில் பேருந்துச் செயல்பாடுகள் உறுதி செய்யப்படும்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கால்பந்து இறுதிப் போட்டி: தில்லி உணவகங்கள், கஃபேக்கள் அதிகாலை வரை செயல்படும்!

தில்லி கல்வி மையமாக மேம்படுத்தப்படும்: முதல்வா் ரேகா குப்தா

இந்தா்லோக் - இந்திரபிரஸ்தா மெட்ரோ வழித்தடப் பணிகள்: தில்லி முதல்வா் தொடங்கிவைத்தாா்







