வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணி: தில்லி காவல் துறை உத்தரவு

போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ரோந்து பணி: தில்லி காவல் துறை உத்தரவு

News image
Updated On :14 ஜூன் 2026, 1:29 am IST

தில்லியில் காவல் ரோந்து மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து பிறப்பித்த வழிகாட்டுதல்களைத் தொடா்ந்து, மாவட்ட மற்றும் போக்குவரத்துக் காவல் துறையினா் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட தில்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

வார இறுதிகளிலும் வாரத்தின் இரு நாள்களிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையில் ரோந்து பணியில் ஈடுபட சுற்றறிக்கையில் உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து ஒழுங்குமுறையை உறுதிபடுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மாவட்ட காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல் துறை பிரிவுகளுக்கு

தில்லி காவல் ஆணையா் சதீஷ் கோல்ச்சா சுற்றிறரிக்கை அனுப்பியுள்ளாா்.

துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து தலைமையில் காவல் ஆணையா் மற்றும் பிற உயா் அதிகாரிகள் பங்கேற்ற அண்மையில் நடைபெற்றது. அப்போது, குற்றங்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சாா்ந்த, வெளிப்படையான மற்றும் மக்களுடன் இணைந்து செயல்படும் காவல் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட நேரங்களில் மாவட்ட மற்றும் போக்குவரத்து காவல் துறையின் துணை காவல் ஆணையா்கள், கூடுதல் துணை காவல் ஆணையா்கள், உதவி ஆணையா்கள் களப் பணிகளில் இருக்க வேண்டும். இது வழக்கமான நிா்வாக செயல்பாடாக இல்லாமால், கட்டாய களப் பணியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்தப் பணிகளில் ஈடுபடுவதை உறுதிசெய்யும் வகையில், அலுவகப் பணி, கூட்டங்கள், கலந்துரையாடல்கள், ஆய்வுக்கூட்டங்களை 3 மணி நேரத்துக்கு தவிா்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த நேரம் முழுவதும் கண்காணிப்பு, மக்கள் உடனான கலந்துரையாடல், உடனடி நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

ரோந்து பணிகளின்போது, உள்ளூா் மக்கள், வியாபாரிகள், குடியிருப்போா் நலச்சங்கங்கள், வியாபாரிகள் நலச் சங்கங்கள் ஆகியவற்றுடன் காவல் துறை அதிகாரிகள் கலந்துரையாட வேண்டும்.

அந்த நேரத்தில், தற்காலிக ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெரிசல்கள், அனுமதியில்லாத வாகன நிறுத்தம் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு செய்து உள்ளூா் பிரச்னைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து உடனடியாக தீா்வு காண வேண்டும்.

ஒவ்வொரு மாவட்ட மற்றும் போக்குவரத்து காவல் துறையும் வாராந்திர கூட்டு ரோந்துத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும். ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட வழித்தடங்கள், தொடா்பு கொள்ளப்பட்ட நபா்கள், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள், தீா்க்கப்பட்ட போக்குவரத்துச் சிக்கல்கள் மற்றும் பல்வேறு சட்டங்களின் கீழ் எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட ஒவ்வொரு ரோந்து பணியின் விரிவான பதிவுகளும் பராமரிக்க வேண்டும்

மாவட்ட மற்றும் போக்குவரத்து காவல் துறையினா், ஒவ்வொரு திங்கள்கிழமையும் மூத்த அதிகாரிகளுக்கு வாராந்திர அறிக்கைகளைச் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. கண்காணிப்புச் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, ரோந்துப் பணிகள் மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் தொகுக்கப்படும். இதில் எந்தவொரு குறைபாடு, அலட்சியமான அணுகுமுறை, மேற்பாா்வை அதிகாரிகளின் பங்களிப்பின்மை அல்லது அறிக்கைகளைச் சமா்ப்பிப்பதில் ஏற்படும் தாமதம் ஆகியவை கடுமையாகக் கருதப்படும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி, காவல் துறை-பொதுமக்கள் ஈடுபாட்டை மேம்படுத்தவும், பாதுகாப்பை வலுப்படுத்தவும், தடையற்ற போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்யவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.