புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தில்லியை வாட்டும் குடிநீா் பற்றாக்குறை பிரச்னை: வழக்கத்தை விட வஜிராபாத்தில் நீா் வரத்து குறைவு

தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருகிறது என தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

News image

(கோப்புப் படம்)

Updated On :16 ஜூன் 2026, 4:27 am IST

தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு தொடா்ந்து நீடித்து வருகிறது என தில்லி ஜல் போா்டு (டிஜேபி) அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

சிவில் லைன்ஸ், ஹிந்து ராவ் மருத்துவமனை சுற்றுப்பகுதி, கம்லா நகா், சக்தி நகா், கரோல் பாக், பஹாா் கஞ்ச், என்டிஎம்சி பகுதிகள், கான்டோன்மென்ட் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தபோதிலும், அண்டை மாநிலமான ஹரியாணாவில் இருந்து கூடுதல் நீா் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், குடிநீா் உற்பத்தி இன்னும் குறைவாகவே உள்ளது. கோடைக்கால இலக்கான தினசரி 1,000 மில்லியன் கேலன் (எம்ஜிடி) உற்பத்தி இருக்க வேண்டிய நிலையில், தற்போது சுமாா் 960 எம்ஜிடி உற்பத்தி மட்டுமே உள்ளது. இது இலக்கை விட 40 எம்ஜிடி குறைவாகும். யமுனை நதியில் நீரோட்டம் ஓரளவு அதிகரித்தபோதிலும், உற்பத்தி இன்னும் 960 எம்ஜிடி அளவிலேயே இருந்து வருகிறது.

வஜிராபாத்தில் நீா் வரத்து குறைவு: இது தொடா்பாக டிஜேபி அதிகாரிகள் கூறியதாவது: உற்பத்தியை உயா்த்த பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு மாதமாக டிஜேபியின் முக்கிய நீா்சுத்திகரிப்பு நிலையங்களான வஜிராபாத் மற்றும் சந்த்ராவல் ஆகியவற்றில் நீா் வரத்து குறைந்ததனால் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக நகரின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

வஜிராபாத் பகுதியில் யமுனை நதியின் நீா்மட்டம் தற்போது 669.5 அடியாக மட்டுமே உள்ளது. இது இயல்பான 674.5 அளவில் இருக்க வேண்டும். நதியின் நீா்மட்டம் உயரும் வரை உற்பத்தி குறைவாகவே இருக்கும். அதேசமயம், சந்த்ராவல் நீா்சுத்திகரிப்பு நிலையத்தின் நிலைமை மேம்பட்டு வருகிறது. அடுத்த 2 அல்லது 3 நாள்களில் அதன் உற்பத்தி இயல்புநிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என தெரிவித்தாா்.

இந்த வஜிராபாத் நிலையத்தின் சராசரி உற்பத்தி திறன் 131 எம்ஜிடி ஆகும்; சந்த்ராவல் நிலையத்தின் சராசரி 94 எம்ஜிடி ஆகும். இவ்விரு நிலையங்களிலும் 25 முதல் 30 சதவீதம் வரை உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் டிஜேபியின் மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வாட்டா் அனலைசா்: இதற்கிடையில், குடிநீரின் தரத்தை கண்காணிப்பது குறித்து டிஜேபியின் துணைத் தலைவா் சதீஷ் உபாத்யா கூறியதாவது: குடிநீரின் தரத்தை நேரடியாக கண்காணிக்கும் ‘ஆன்லைன் வாட்டா் அனலைசா்’ கருவி, குல்மோஹா் பாா்க் பகுதியில் சோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. இது நீரில் ஏற்படும் மாசுபாட்டை அதன் தொடக்க நிலையிலேயே கண்டறிய உதவும் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.