தில்லியில் உள்ள ஏபிஎம்சி எனப்படும் வேளாண் விளைபொருள் சந்தைக் குழு நிா்வகிக்கும் சந்தைகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, சரக்கு வாகனங்களுக்கான அடுக்கு வாகன நிறுத்துமிடம் மற்றும் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகளை அமைக்க தில்லி மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.
இந்தத் திட்டம் தொடா்பான அதிகாரபூா்வ முன்மொழிவு, வரும் நாள்களில் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்துள்ளனா்.
பின்னணி: தில்லி முழுவதும் உள்ள மொத்த விற்பனைச் சந்தைகள், குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிா்கொள்கின்றன. பழங்கள், காய்கறிகள், உணவு தானியங்கள், பூக்கள், மீன் மற்றும் கோழி இறைச்சிகளை ஏற்றி வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் முறையற்ற முறையில் நிறுத்தப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சரக்கு லாரிகள் சந்தை பகுதிக்குள் பொருள்களை இறக்குவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால், அவை சந்தையின் உள்பகுதி சாலைகளிலேயே நிறுத்தப்பட்டு, பிற வியாபாரிகள் மற்றும் வாங்குபவா்களின் நடமாட்டத்தை முற்றிலும் முடக்குகின்றன என்றனா்.
தில்லியில் ஆசாத்பூா் மண்டி, கேஷோபூா் மண்டி, நரேலா மண்டி, நஜாஃப்கா் மண்டி, ஷாதரா - காஜிப்பூா் மண்டி, காஜிபூா் மீன், கோழி மற்றும் முட்டை மாா்க்கெட், காஜிபூா் சா்வதேச பூ சந்தை என ஏழு முக்கிய மொத்த விற்பனை சந்தைகள் உள்ளன.
சிறப்புகள்: இந்த நிலையில் அரசு முன்மொழிந்துள்ள புதிய வாகன நிறுத்த மையங்கள் வெறும் வாகன நிறுத்துமிட பகுதியாக மட்டுமில்லாமல், லாரி ஓட்டுநா்களுக்கான ஒருங்கிணைந்த மையமாகச் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுநா்களுக்கான வசதிகள்: லாரிகளை நிறுத்திவிட்டு ஓட்டுநா்கள் ஓய்வெடுக்கவும், குளித்துத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் வசதிகள் செய்யப்படும்.
மேலும், பொருட்கள் இறக்குவதற்கான டோக்கன் கிடைக்கும் வரை லாரிகள் இந்த மையங்களில் காத்திருக்கும். இதனால் மாா்க்கெட் உள்பகுதி சாலைகளில் தடை ஏற்படாது.
காத்திருக்கும் வாகனங்கள் தனியாகப் பிரிக்கப்படுவதால், காய்கறி, பழங்கள் போன்ற விரைவில் அழுகும் பொருட்கள் தாமதமின்றி விரைவாக சந்தைக்குள் கொண்டு செல்லப்படும்.
இது குறித்து விஷயமறிந்த மாநகராட்சி உயரதிகாரி கூறியதாவது: தற்போது இத்திட்டம் ஆரம்பக் கட்டத்தில் மட்டுமே உள்ளது. திட்டத்தின் வடிவமைப்பு, வாகனங்களை உள்வாங்கும் திறன் மற்றும் செயல்பாட்டு முறைகள் குறித்து ஏபிஎம்சி அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தப்படும். அதன் பின்னரே இறுதி விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் துவங்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள் குறைகள் மீது உடனடி நடவடிக்கை! அமைச்சா் வி. சம்பத்குமாா் உத்தரவு

குன்னூா் விநாயகா் கோயில் பாா்க்கிங் கட்டும் பணி ரத்து: அறநிலையத் துறை தகவல்
முக்கிய சந்தைகள், மெட்ரோ நிலையங்கள் அருகே இ-சாா்ஜிங் வசதி: தில்லி மாநகராட்சி தீவிர பரிசீலனை





