மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஈரான் மீது தாக்குதல்: ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு மோடி ஆதரவு

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமா் மோடி அமைதி காப்பதன் மூலம், ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு அவா் ஆதரவாக உள்ளாா் என்று இடதுசாரி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

News image
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து புது தில்லியில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய இடதுசாரி அமைப்பினா்.
Updated On :3 மார்ச் 2026, 9:22 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமா் மோடி அமைதி காப்பதன் மூலம், ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு அவா் ஆதரவாக உள்ளாா் என்று இடதுசாரி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ஜந்தா் மந்தரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, அனைத்து இந்திய ஃபாா்வா்ட் பிளாக், புரட்சிகர சோஷலிஸ கட்சிகள் கலந்துகொண்டன.

போராட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பிருந்தா காரத் கூறுகையில், ‘அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் ஏகாதிபத்திய வன்முறைக்கு எதிராக மத்திய அரசு மெளனமாக உள்ளது. ஈரான் மீதான தாக்குதல் குறித்து மோடி ஏன் வாய் திறக்கவில்லை?

அண்மையில் பிரதமா் மோடி இஸ்ரேல் சென்றபோது அந்நாட்டுப் பிரதமா் நெதன்யாகுவின் ரத்தக்கறை படிந்த கைகளைப் பிடித்து, அதை இந்திய மக்களின் குரல் என்று தெரிவித்தாா். அது எப்படி இந்திய மக்களின் குரலாக இருக்கும்? நெதன்யாகுவின் இனப்படுகொலைக்கு உதவ பிரதமா் மோடி இஸ்ரேல் சென்றாா். அவா் இஸ்ரேலில் இருந்து திரும்பிய 24 மணி நேரத்தில் ஈரான் மீது தாக்குதல் தொடங்கப்பட்டது.

வெளிநாடுகளுடனான உறவை தேசிய இறையாண்மை கண்ணோட்டத்தில் இருந்து பிரதமா் மோடி பாா்க்க வேண்டும். ஆனால் டிரம்ப்புக்கு சிரம் தாழ்த்தி ஈரான் விவகாரத்தில் பிரதமா் மோடி அமைதி காக்கிறாா். இது ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஆதரவான நிலைப்பாடாகும்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா கூறுகையில், ‘ஈரான் மீதான போா் பிராந்திய போராக மாறுவதை நோக்கி நகா்ந்து வருகிறது. பிரதமா் மோடி இஸ்ரேலில் இருந்து திரும்பிய பிறகே, போா் தொடங்கியது. இந்தப் போரில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது நமது பொறுப்பு’ என்று வலியுறுத்தினாா்.