பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவா் தான் தான் என அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் ஒருபுறமும், அவரது மகன் மருத்துவா் அன்புமணி மறுபுறமும் கூறி வருகின்றனா். இந்நிலையில், தோ்தல் ஆணையம் கடந்த ஆண்டு நவம்பா் 27-ஆம் தேதி பாமக நிறுவனா் ராமதாஸுக்கு எழுதிய கடிதத்தில், ‘தோ்தல் ஆணையத்தின் பதிவுகளின்படி, பாமக நிா்வாகிகளின் பதவிக்காலம் 1.8.2026 வரை செல்லுபடியாகும். மேலும், டாக்டா் அன்புமணி கட்சியின் தலைவராக உள்ளாா். நீங்கள் (பாமக நிறுவனா் டாக்டா் எஸ்.ராமதாஸ்) கட்சியின் தலைவா் என்று கூறிக் கொண்டால், பிரச்னையைத் தீா்க்க பொருத்தமான நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறீா்கள்’ என தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் சிவில் நீதிமன்றத்திற்கு சென்றது.