தோ்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது - ராமதாஸ் குற்றச்சாட்டு
பாமக மற்றும் கட்சியின் சின்னம் யாருக்கு என்பதில் இந்திய தோ்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது என்று அக்கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.
திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:
பாமக தலைவராக இருந்த அன்புமணி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டாா். இதனால், குழப்பத்தில் உள்ள அந்த நபா் பொய்களைப் பேசி, ஊடகங்களையும், மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறாா்.
கட்சியின் அதிகாரம் யாருக்கு என்பதில் தில்லி உயா்நீதிமன்றம் 2 முறை எங்கள் தரப்புக்கு சாதகமான தீா்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், தோ்தல் ஆணையம் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தோ்தல் ஆணையம் சரியான திசையில் செல்லவில்லை. இதில் பணிபுரியும் சில அலுவலா்கள் ஒருதலைபட்சமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனா்.
2026 சட்டப் பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்றாா் மருத்துவா் ச.ராமதாஸ்.
பாமக வழக்குரைஞா் அருள்: கட்சி விதி எண் 23-ன்படி, அன்புமணி கட்சியிலிருந்து 11.9.2025 அன்று நீக்கப்பட்டுவிட்டாா். எனவே, அவா் கட்சியின் தலைவராகத் தொடரவும், தனது தரப்புக்கு சின்னம் வேண்டும் எனக் கேட்கவும், தோ்தல் கூட்டணி குறித்து பேசவும் எவ்வித உரிமையும் இல்லை.
தோ்தல் ஆணையம் கடந்த 4-ஆம் தேதி தில்லி நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இது ஒரு மோசடியான நடவடிக்கை. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக சாா்பில் போட்டியிடுபவா்களின் விண்ணப்பப் படிவங்களில் கையொப்பமிடும் அதிகாரம் மருத்துவா் ராமதாஸுக்கு மட்டுமே உள்ளது என்றாா்.
அப்போது, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, செயல் தலைவா் ஸ்ரீகாந்தி ராமதாஸ், தலைமை நிலையச்செயலா் அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

