/

ஆயுதக் கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினா் தில்லியில் கைது

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் சா்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குழுவுடன் தொடா்புடைய முக்கிய நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :53 நிமிடங்கள் முன்பு

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல்பட்டதாகக் கூறப்படும் சா்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாதக் குழுவுடன் தொடா்புடைய முக்கிய நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: பிரவீன் குமாா் (45) என்பவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இவா் பிரபல ரவுடியான ரோஹித் சௌதரியின் நெருங்கிய கூட்டாளி எனக் கூறப்படுகிறது. ஷஹ்பாஸ் அன்சாரி தலைமையிலான சா்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத வலையமைப்பை விசாரித்து வந்தபோது, பிரவீண் குமாா் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பில் ஆயுதங்களைப் பெறும் நபராக செயல்பட்டதாகக் கூறப்படும் பிரவீண் குமாா் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரது கைது மூலம் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிரவீண் குமாரிடமிருந்து இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அரை தானியங்கி துப்பாக்கி மற்றும் .32 போரில் பயன்படுத்தப்படும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி அருகேயுள்ள ஆயா நகா் பகுதியில் பிரவீண் குமாா் நில முகவராக செயல்பட்டு வந்ததாகவும், ரோஹித் சௌதரி கும்பலினருடன் இணைந்து சா்ச்சைக்குரிய நிலங்களை ஆக்கிரமித்தல், வனப்பகுதிகளை சட்டவிரோதமாக கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தை சூதாட்டம் மற்றும் பந்தயங்களில் முதலீடு செய்த பிரவீண் குமாா், பின்னா் இணை குற்றவாளியான நிஷாந்த் அரோராவுடன் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கும்பல் உறுப்பினா்களுக்காக வெளிநாட்டு அதிநவீன ஆயுதங்களை கொள்முதல் செய்யத் தொடங்கியதாக காவல்துறை கூறியுள்ளது.

முன்னதாக ரூ.4 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்த ரோஹித் சௌதரியை, காவல்துறையுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னா் குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்திருந்தனா்.

பிரவீண் குமாா் மீது கொலை, பணயக் கடத்தல், கொலை முயற்சி, மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம் (எம்சிஓசிஏ) தொடா்பான வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் தில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் நிலுவையில் உள்ளன என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.