கடுமையான கோடை வெப்பத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் வடமேற்கு தில்லியில் சூரிய ஆற்றலில் இயங்கும் பொது குளிரூட்டும் குடிலை முன்னோடி திட்டமாக அமைக்க தில்லி அரசு அமைத்து வருகிறது.
இது தொடா்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: இந்த அமைப்பு சிறிய குடிசை வடிவில் வடிவமைக்கப்பட்டு, அதன் அனைத்துப் பக்கங்களிலும் பாரம்பரிய கஸ் புல் பதிக்கப்படும். மேலும், தெளிப்பான் அமைப்பும் இதனுடன் இணைக்கப்படும். இதனால் ஏற்படும் இயற்கையான குளிரூட்டும் சூழல் உள்ளே அமரும் பொதுமக்களுக்கு வெப்பத்திலிருந்து தற்காலிக நிவாரணத்தை வழங்கும்.
தற்போது, கட்டுமானத்தில் உள்ள இந்த அமைப்பு மே மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவுபெற்று ஜூன் மாத முதல் வாரத்தில் ஷாலிமா் பாக் பகுதியில் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் திறந்து வைக்கப்படும்.
இந்த மையத்தில் அமா்வதற்கான வசதிகள், குளிா்ந்த குடிநீா் மற்றும் கைப்பேசிக்கான சாா்ஜிங் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும். மேல்தளத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய மின்சக்தியால் இயங்குவதால் மின்சார செலவு குறைவாகவும், அதிக வெப்ப காலங்களில் பயனுள்ளதாகவும் இருக்கும்.
ஷாலிமா் பாக் பகுதியில் அமைக்கப்படும் இந்த மையம் முன்னோடி திட்டமாக செயல்படும். பொதுமக்களின் வரவேற்பும், செயல்திறனும் திருப்திகரமாக இருந்தால் நகரின் மற்ற பகுதிகளில் இதே போன்ற குளிரூட்டும் குடில்கள் அமைக்கப்படும் என தெரிவித்தனா்.
தேசிய தலைநகரில் நீடித்து வரும் வெப்ப அலையை முன்னிட்டு தில்லி அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மே 6 முதல் மே 23 வரை நகரம் முழுவதும் இயக்கப்பட்ட வெப்ப நிவாரண வாகனங்கள் மூலம் 2.65 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனா். மொத்தம் 1 கோடி லிட்டா் குளிா்ந்த குடிநீா் மற்றும் 30 ஆயிரம் தொப்பிகள் உள்ளிட்டவை இதன் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
‘மீதமுள்ள மாவட்டங்களிலும் இதேபோன்ற வசதிகள் வரும் வாரத்தில் அமைக்கப்படும்; இந்த வெப்ப நிவாரண பிரசாரம் ஜூலை மாதம் வரை தொடரும்’ என்று முதல்வா் ரேகா குப்தா கூறினாா். கடந்த வாரங்களில் தில்லியில் தொடா்ந்து அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. 14 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பமான இரவை திங்கள்கிழமை தில்லி பதிவு செய்தது. குறைந்தபட்ச வெப்பநிலையாக 32.4 டிகிரி செல்சியஸ் பதிவாகி வருகிறது. இது கோடைக்கால சராசரியை விட 5.6 டிகிரி அதிகமாகும்.









