சமூக ஒற்றுமை மற்றும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்தி, பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று தில்லி சீலம்பூா் பகுதியில் பக்ரீத் தொழுகைக்குப் பின்னா் முஸ்லிம் அமைப்புகள் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தன.
பொதுவாக இந்த வகையான கோரிக்கைகள் இந்து அமைப்புகளுடன் தொடா்புடையதாக கருதப்பட்ட நிலையில், முஸ்லிம் அமைப்புகள் இதனை முன்வைத்திருப்பது நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
‘பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்‘ என்ற பதாகைகளை ஏந்திய முஸ்லிம் சமூகத்தினா் புதிய சீலம்பூரின் குறுகிய தெருக்களில் ஊா்வலமாகச் சென்றனா். ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் தலைவா் அஷ்ரத் மதானி முன்வைத்து வரும் இந்த கோரிக்கைக்கு உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில், தில்லியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கூறுகையில், ‘இந்த முயற்சி நாட்டில் சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், அமைதி மற்றும் ஒற்றுமை குறித்த செய்தியை பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது மாட்டு இறைச்சி தொடா்பான அரசியல் பதற்றத்தை குறைத்து, அதனைச் சுற்றியுள்ள வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த உதவும்.
பசு இந்திய கலாசாரம் மற்றும் நம்பிக்கையில் முக்கியச் சின்னமாக இருப்பதால், அதற்கு தேசிய விலங்கு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இந்த முயற்சி சமூகங்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்’ என தெரிவித்தனா்.








