2014, 2019 தேர்தல் வெற்றியின்போது எஸ்.ஐ.ஆர். இருந்ததா? ராகுலுக்கு அமித் ஷா கேள்வி8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

தில்லியில் ‘மிக மோசம்’ நிலையில் காற்றின் தரம்: ‘கடுமை’ பிரிவில் 3 இடங்கள்

தில்லியில் காற்று மாசு அதிகரித்து, நிகழ் பருவத்தின் முதல் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியது. நகரின் 3 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் மாசு அளவு ‘கடுமையான’ நிலையைப் பதிவு செய்தது.

இந்தியா கேட் பகுதியில் காற்று மாசு காரணமாக நிலவிய குறைந்த தெளிவுத்திறன்

Updated On :

தில்லியில் திங்கள்கிழமை காற்று மாசு அதிகரித்து, நிகழ் பருவத்தின் முதல் ‘மிகவும் மோசம்’ என்ற நிலையை எட்டியது. நகரின் 3 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் மாசு அளவு ‘கடுமையான’ நிலையைப் பதிவு செய்தது. இதனால் தில்லி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது.

தில்லியின் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) 324-ஆகப் பதிவாகி, ‘மிகவும் மோசமான’ நிலையை எட்டியது. கடந்த பிப். 4-ஆம் தேதி ஏக்யூஐ 339-ஆக இருந்தது. அதன்பிறகு, 271 நாள்களுக்குப் பின்னா், அதாவது ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு திங்கள்கிழமை மாசு அதிகரித்துள்ளது.

மாலை 4 மணிக்கு 3 கண்காணிப்பு மையங்களில் காற்றின் தரம் ‘கடுமையான’ நிலையை எட்டியது. ஜஹாங்கீா்புரியில் அதிகபட்சமாக 436 ஏக்யூஐ பதிவானது. ரோஹிணியில் 415, பஞ்சாபி பாக்கில் 413 எனப் பதிவானது.

நகரில் உள்ள 58 கண்காணிப்பு மையங்களில் 37 மையங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ நிலையிலும், 17 மையங்களில் ‘மோசமான’ நிலையிலும் இருந்தது. 3 மையங்களில் ‘கடுமையான’ நிலையும், ஒரே ஒரு மையத்தில் மட்டும் ‘மிதமான’ நிலையும் பதிவானது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) வகைப்பாட்டின்படி, ஏக்யூஐ 0-50 வரை இருந்தால் நல்ல நிலை, 51-100 வரை திருப்திகரமான நிலை, 101-200 வரை மிதமான நிலை, 201-300 வரை மோசமான நிலை, 301-400 வரை மிகவும் மோசமான நிலை, 401-500 வரை கடுமையான நிலை என வகைப்படுத்தப்படுகிறது.

பிஎம் அளவு அதிகரிப்பு: தில்லியில் நுண்துகள்களான பிஎம் 2.5 மாசு அதிக அளவில் காணப்படுவதாக சிபிசிபி தெரிவித்துள்ளது. 2.5 மைக்ரோமீட்டா் அல்லது அதற்கும் குறைவான அளவுடைய இந்த நுண்துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்குள் ஊடுருவுவதுடன், ரத்த ஓட்டத்திலும் கலக்கக்கூடும். வாகனப் புகை, தொழிற்சாலை நடவடிக்கைகள், கட்டுமானப் பணிகள், சாலைத் தூசி, குப்பை எரிப்பு உள்ளிட்டவற்றால் இந்தத் துகள்கள் உருவாகின்றன.

தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த மாநில அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த இரண்டாவது நாளில் இந்த மாசு அளவு பதிவாகியுள்ளது.

தில்லிக்கான காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பின் கணிப்பின்படி, நவ.3 முதல் 5-ஆம் தேதி வரை காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ நிலையிலேயே நீடிக்கக்கூடும். அதற்கடுத்த 6 நாள்களில் மாசு அளவு சற்றுக் குறைந்து ‘மோசமான’ நிலையை எட்ட வாய்ப்புள்ளது.

மாசு ஏற்படுத்தும் காரணிகள்: திங்கள்கிழமை மாசு அளவில் போக்குவரத்துத் துறையின் பங்களிப்பு 19.2 சதவீதமாக இருந்தது. தில்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தொழிற்சாலைகள் 4.2 சதவீதம் பங்களித்தன. தில்லிக்குள் குடியிருப்புப் பகுதிகளின் செயல்பாடுகள் 4.9 சதவீதமும், எரிசக்தித் துறை 1.8 சதவீதமும், குப்பை எரிப்பு 1.8 சதவீதமும், பிற துறைகள் 1.3 சதவீதமும் மாசுக்குப் பங்களித்தன. பயிா்க்கழிவுகள் எரிக்கப்படுவதால் 8.4 சதவீத மாசு ஏற்பட்டதாகவும், பிற காரணங்களின் பங்களிப்பு 20.7 சதவீதமாக இருந்ததாகவும் டிஎஸ்எஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.

தேசிய தலைநகா் வலயத்தின் அண்டை மாவட்டங்களில் ஜஜ்ஜாா் 6.9 சதவீத மாசுப் பங்களிப்புடன் முதலிடத்தில் இருந்தது. சோனிபட் 5.1 சதவீதம், குருகிராம் 2.9 சதவீதம், ரோஹ்டக் 2.7 சதவீதம், காஜியாபாத் 2.6 சதவீதம், பாக்பத் 2.4 சதவீதம், பானிபட் மற்றும் பிவானி தலா 2 சதவீதம், கௌதம் புத்த நகா் 1.9 சதவீதம் எனப் பங்களித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.