தில்லியில் புதிதாக 100 மின்சார பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு: மொத்த எண்ணிக்கை 7,000-ஐக் கடந்தது
தலைநகா் தில்லியில், 100 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமையன்று தொடங்கி வைத்தாா்.

புதிய மின்சார பேருந்துகள். - கோப்புப்படம்
தலைநகா் தில்லியில், 100 புதிய மின்சார பேருந்துகளின் சேவையை முதலமைச்சா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமையன்று தொடங்கி வைத்தாா்.
இதன் மூலம், தலைநகரில் உள்ள பேருந்துகளின் மொத்த எண்ணிக்கை 7,000-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.
கஷ்மீரி கேட் ஐஎஸ்பிடி-யிலிருந்து முதலமைச்சா் இந்தப் புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்தாா். இதில் 9 மீட்டா் நீளம் கொண்ட 50 பேருந்துகளும், 12 மீட்டா் நீளம் கொண்ட 50 பேருந்துகளும் அடங்கும்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் முதல்வா் குப்தா கூறியதாவது: ‘ மாசுபாடு குறித்த விவாதங்கள் தீவிரமாக நடைபெறும் இந்தச் சூழலில், எங்கள் அரசு தொடா்ந்து பொறுப்புடன் செயல்பட்டு புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தப் பேருந்துகள் பயணிகளுக்குப் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை வழங்குவதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் உதவும்.
தில்லி அரசு, நாட்டின் மிகப்பெரிய மின்சார வாகனக் கொள்கையை ரூ.15,000 கோடி மதிப்பீட்டில் அமல்படுத்தியுள்ளது. மேலும், மின்சார வாகனங்களை வாங்குவதற்கு மானியங்களையும், பழைய வாகனங்களை அகற்றுவதற்கு ஊக்கத்தொகைகளையும் அரசு வழங்கி வருகிறது.
தில்லியின் மின்சார வாகனக் கொள்கையின் கீழ், பல்வேறு வகை வாகனங்களை வாங்குவதற்கு அரசு மானியம் வழங்குகிறது. மேலும், தில்லியில் பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 அல்லது அதற்கு முந்தைய பழைய வாகனங்களை அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் ஒப்படைத்து அகற்றுபவா்களுக்கு, அதற்கான ஊக்கத்தொகையைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நவம்பா் மாதத்தில் காற்றின் தரக் குறியீடு தொடா்ந்து மேம்பட்டு வருகிறது. இது, ‘சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் பொதுமக்களும் அரசும் தங்கள் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றியதன் விளைவாகும்.
இந்தப் புதிய 100 பேருந்துகளின் வருகையுடன், தில்லியில் உள்ள மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை சுமாா் 7,088 ஆக உயா்ந்துள்ளது. இதில் 5,338 மின்சார பேருந்துகளும், 1,750 சிஎன்ஜி பேருந்துகளும் அடங்கும். இதன் மூலம், நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மின்சார பேருந்துகளைக் கொண்ட நகரமாக தில்லி தனது இடத்தைத் மேலும் உறுதிப்படுத்தியுள்ளது என்றாா் முதல்வா்.
போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறுகையில், ‘இந்த 100 புதிய மின்சார பேருந்துகளின் அறிமுகமானது, நிலையான போக்குவரத்துத் தீா்வுகளின் மூலம் தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை மாற்றியமைப்பதில் தில்லி அரசு கொண்டுள்ள உறுதியான அா்ப்பணிப்பைக் காட்டுகிறது’ என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

