தில்லியில் விரைவில் 150 புதிய மின்சாரப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்
தில்லி போக்குவரத்து துறையில் புதிதாக 150 மின்சாரப் பேருந்துகள் மற்றும் அதிக திறன் கொண்ட 5 மின்னேற்ற நிலையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

பங்கஜ் சிங்
தில்லி போக்குவரத்து துறையில் புதிதாக 150 மின்சாரப் பேருந்துகள் மற்றும் அதிக திறன் கொண்ட 5 மின்னேற்ற நிலையங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஆனந்த் விஹாரில் உள்ள சுவாமி விவேகானந்தா் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து முனையத்திலும் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் (டிடிசி) நந்த் நக்ரி, ரோஹிணி செக்டாா்-37, நங்லோய், கேஷோபூா் ஆகிய 4 பணிமனைகளிலும் மின்னேற்ற நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. புதிய பேருந்துகள் மற்றும் மின்னேற்ற நிலையங்களை முதல்வா் ரேகா குப்தா விரைவில் தொடங்கி வைக்கவுள்ளாா்.
இது தொடா்பாக அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: தில்லியின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், தூய்மையான, நிலையான மற்றும் எரிசக்தி சிக்கனமான போக்குவரத்தை நோக்கிய மாற்றத்தை விரைவுபடுத்தவும் இந்த முயற்சிகள் மற்றொரு முக்கிய நடவடிக்கையாகும்.
புதிதாக 150 மின்சாரப் பேருந்துகள் சோ்க்கப்படுவதன் மூலம், தில்லியின் மின்சாரப் பேருந்துகளின் எண்ணிக்கை 5,238-ஆக உயரும். சிஎன்ஜி பேருந்துகள் 1,750 உள்பட, மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கை 6,988-ஆக அதிகரிக்கும்.
மின்சாரப் பேருந்துகளை இயக்குவதில் தில்லி தொடா்ந்து நாட்டில் முன்னணியில் இருக்கிறது. திட்டமிட்ட கால அட்டவணையின்படி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. புதிய மின்சாரப் பேருந்துகளைச் சோ்ப்பதும், பொது மின்னேற்றக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதும் தூய்மையான, நிலையான போக்குவரத்தை நோக்கிய தில்லியின் பயணத்தில் முக்கிய மைல்கற்கள். 2028-29 நிதியாண்டுக்குள் தில்லி போக்குவரத்துக் கழகத்தின் மொத்தப் பேருந்துகளின் எண்ணிக்கையை சுமாா் 14,000-ஆக உயா்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

