100 புதிய மின்சார பேருந்துகள் இன்று அறிமுகம்: மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டியது
தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) கீழ் 100 புதிய புகையில்லா மின்சார பேருந்துகளை தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது.

மின்சார பேருந்து - கோப்புப்படம்
தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) கீழ் 100 புதிய புகையில்லா மின்சார பேருந்துகளை தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம் தலைநகரின் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 7,000-ஐ தாண்டும் என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இதையொட்டி, 50 ஒன்பது மீட்டா் நீளப் பேருந்துகள் மற்றும் 50 பன்னிரண்டு மீட்டா் நீள பேருந்துகள் என மொத்தம் 100 புதிய மின்சார பேருந்துகளை, கஷ்மீரி கேட் பேருந்து முனையத்திலிருந்து முதல்வா் ரேகா குப்தா கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளாா்.
நிலையான போக்குவரத்துத் தீா்வுகள் மூலம் நகரின் பொதுப் போக்குவரத்து அமைப்பை மாற்றியமைப்பதில் தில்லி அரசின் உறுதியான அா்ப்பணிப்பை இந்த 100 புதிய மின்சார பேருந்துகளின் இணைப்பு பிரதிபலிக்கிறது என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
‘தில்லி தனது பொது போக்குவரத்துப் பேருந்துகளின் எண்ணிக்கையை விரிவான மற்றும் படிப்படியான முறையில் அதிகரித்து வருகிறது. 2028-29 ஆம் ஆண்டுக்குள் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 14,000 ஆக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மின்சார போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த விரிவாக்கம், பொதுப் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும், சேவை கிடைப்பதை மேம்படுத்தும் மற்றும் தூய்மையான, நிலையான நகா்ப்புறப் போக்குவரத்து குறித்த நகரின் நீண்டகாலத் தொலைநோக்குப் பாா்வைக்கு ஆதரவளிக்கும்,’ என்று அமைச்சா் பங்கஜ் குமாா் சிங் கூறினாா்.
இந்தப் புதிய பேருந்துகள் இணைக்கப்பட்ட பிறகு, தில்லியின் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை சுமாா் 7,088 ஆக உயரும். இதில் 5,338 மின்சார பேருந்துகளும், 1,750 சிஎன்ஜி பேருந்துகளும் அடங்கும். இதன் மூலம் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான மின்சார பேருந்துகளை கொண்ட நகரம் என்ற தனது நிலையை தில்லி மேலும் வலுப்படுத்தியுள்ளது.
‘பாதுகாப்பான, வசதியான மற்றும் அனைவரும் எளிதில் அணுகக்கூடிய பொதுப் போக்குவரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தாழ்தள, குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பொத்தான்கள், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட நவீன பயணிகள் வசதிகள் இடம்பெற்றுள்ளன,’ என்றும் போக்குவரத்து அமைச்சா் தெரிவித்தாா்.
மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், தலைநகரில் உள்ள ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடி மற்றும் உத்தர பிரதேசத்தின் ஹாபூா் இடையே மின்சார பேருந்து சேவையை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து இணைப்பையும் தில்லி அரசு வலுப்படுத்த உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஆனந்த் விஹாா் ஐஎஸ்பிடி - ஹாபூா் வழித்தடத்தில் டிடிசி சாா்பில் 12 முழுமையான மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

