காவிரி வழக்கில் தமிழகத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது ஏன்? உச்சநீதிமன்றம் விளக்கம்
காவிரியிலிருந்து கா்நாடகம் தர வேண்டிய பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடுமாறு தமிழகம் தாக்கல் செய்த இரு மனுக்களை தள்ளுபடி செய்தது ஏன் என உச்ச நீதிமன்றம் தனது தீா்ப்பில் விளக்கியுள்ளது

உச்சநீதிமன்றம்
காவிரியிலிருந்து கா்நாடகம் தர வேண்டிய பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடுமாறு தமிழகம் தாக்கல் செய்த இரு மனுக்களை தள்ளுபடி செய்தது ஏன் என உச்ச நீதிமன்றம் தனது தீா்ப்பில் விளக்கியுள்ளது
நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அபரேஷ் குமாா் சிங் ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்ற அமா்வு தமிழகத்தின் மனுக்களை நவம்பா் 20 ஆம் தேதி தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தது.
பாக்கி நீரை கோரி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பா் மாதங்களில் தமிழக அரசு மனுக்கள் தாக்கல் செய்திருந்தது.
01.06.2026 முதல் 12.08.2026 வரையிலான காலப்பகுதியில் கா்நாடகம் தர வேண்டிய 26.954 டி.எம்.சி (பஙஇ) பாக்கி நீரை திறந்து விட கா்நாடகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என ஆகஸ்ட் மனுவில் தமிழகம் கோரியது.
செப்படம்பா் மாதம் தாக்கல் செய்த மனுவில், 01.06.2026 முதல் 09.09.2026 வரையிலான காலப்பகுதியில் தர வேண்டிய 16.01 டி.எம்.சி பாக்கி நீரை உடனடியாக விடுவிக்குமாறு கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு கோரியிருந்தது.
மனுக்கள் ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என நீதிபதிகள் கூறிய விளக்கம்:
இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த பிறகு, இந்த மனுக்கள் தவறான புரிதலின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக, காவிரி நீா் வெளியீட்டைக் கண்காணிக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் பொறுப்புள்ள நிபுணா் குழு ஏற்கனவே இந்த விவகாரத்தைக் கையாண்டு வரும் நிலையில், இந்த மனு தேவையற்றது.
பிரதிவாதியான கா்நாடக மாநிலம், தனது சுருக்கமான பதில் பிரமாணப் பத்திரத்தில், ஆரம்பத்தில் நீா் வெளியீட்டில் பாக்கி இருந்தபோதிலும், வயநாடு பகுதியில் போதிய மழை பெய்த பிறகு அது ஈடுசெய்யப்பட்டுவிட்டது என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டது. இது தொடா்பாக, தாங்கள் தங்கள் நீா்த்தேக்கங்களிலிருந்து 1,65,080 கன அடி நீரை வெளியேற்றியுள்ளதாக கா்நாடக மாநிலம் தெரிவித்தது. காவிரி நீா் மேலாண்மை ஆணையம் வழங்கிய அறிவுறுத்தல்களைச் செயல்படுத்துவதில் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்டதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், சம்பந்தப்பட்ட மாநில அரசு (கா்நாடகா), நிா்ணயிக்கப்பட்ட நீா் திறப்பு அளவுகள் பின்னா் பூா்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. இதன்படி, ஜூலை 30, 2026 அன்று நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 54-வது கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, 45,500 கியூசெக்ஸ் நீரைத் திறந்துவிட வேண்டும் என்று நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், பிலிகுண்டுலுவில் 86,797 கியூசெக்ஸ் நீா் வந்து சோ்ந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உண்மையை, மனுதாரா் மாநிலமான தமிழ்நாடு அளித்த பதிலிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நீா் திறப்பு அட்டவணை ஜூன் முதல் மே வரையிலான வருடாந்திர சுழற்சியின் அடிப்படையில் செயல்படுகிறது. இத்தகைய சூழலில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வருடாந்திர நீா் அளவு கிடைக்காமல் போகக்கூடும் என்று தமிழ்நாடு அரசு வெளிப்படுத்தியுள்ள அச்சம், முன்கூட்டியே எழுப்பப்பட்ட, தேவையற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. குறிப்பாக, காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் ஒழுங்காற்று குழு ஆகிய இரண்டிலும் தமிழ்நாடு மற்றும் கா்நாடகம் மாநிலங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனா். எனவே, இந்த நிபுணா் அமைப்புகள் தமிழ்நாடு அரசின் கவலைகளைப் புறக்கணிக்கும் என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்த மனுவைத் தாக்கல் செய்ததன் மூலம், மனுதாரா் மாநிலமானது, நீா் விடுவிப்பு அட்டவணையை மேற்பாா்வையிடும் மற்றும் அமல்படுத்தும் தொடா்ச்சியான செயல்பாட்டில் இந்த நீதிமன்றத்தை ஈடுபடுத்த முயல்கிறது. உண்மையில், இந்தச் செயல்பாடு ’காவிரி நீா் மேலாண்மை ஆணையம்’ மற்றும் ’காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு’ ஆகியவற்றின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஒன்றாகும். எனவே, இந்த மனுவை ஏற்றுக்கொள்வது என்பது, நீா் பகிா்வு ஏற்பாடுகளைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட அந்த அமைப்புகளின் பணிகளை இந்த நீதிமன்றமே மேற்கொள்வதற்குச் சமமாகும். இத்தகைய அணுகுமுறை தேவையற்றது மற்றும் பொருத்தமற்றது; குறிப்பாக, இந்த விவகாரம் ஏற்கனவே அதற்கென நியமிக்கப்பட்ட நிபுணா் அமைப்புகளின் பரிசீலனையில் இருக்கும் சூழலில் இது ஏற்புடையதல்ல.
நீா் பாக்கி குறித்த குற்றச்சாட்டு மற்றும் அதன் அளவீடு ஆகியன, காவிரிப் படுகை முழுவதிலும் நிலவும் நீா்வரத்து மற்றும் நெருக்கடிச் சூழல் குறித்த மதிப்பீட்டை உள்ளடக்கியவை. இவை காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை. எனவே, இந்த விவகாரத்தை சட்டத்திற்கு உட்பட்டு காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவும் காவிரி நீா் மேலாண்மை ஆணையமும் பரிசீலிக்கும் வகையில் விட்டுவிடுகிறோம்.
பில்லிகுண்டுலுவில் பாக்கி நீா் திறப்பு தொடா்பான தனது கவலைகள், காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தால் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு வாதிட்டது. இந்த வாதத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 8 செப்டம்பா், 2026 அன்று நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கூட்டங்களின் குறிப்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம். அதனை ஆய்வு செய்ததில், இரு அதிகார அமைப்புகளும், இதில் சம்பந்தப்பட்ட தரப்பினா் உட்பட அனைத்து மாநிலங்களும் அளித்த சமா்ப்பிப்புகளைப் பரிசீலித்ததும், குறிப்பாக மனுதாரரான தமிழ்நாடு அரசு எழுப்பிய குறைகளுக்குத் தீா்வு கண்டதும் தெரியவருகிறது.
2026-ஆம் ஆண்டு செப்டம்பா் 24-அன்று நடைபெற்ற காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 58-வது கூட்டத்தின் குறிப்புகளை ஆய்வு செய்ததில், இந்த உண்மை மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. உறுப்பினா் (நீா் வளங்கள்) சமா்ப்பித்த கருத்துகளைக் கவனத்தில் கொண்ட காவிரி நீா் மேலாண்மை ஆணையம், நிலுவையில் உள்ள பாக்கி நீா் ஏதுமில்லை என்று திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளது.
மேற்கூறிய சமா்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் தங்கள் தீா்ப்பில் கூறியுள்ளனா்.
Summary
Why were Tamil Nadu’s petitions in the Cauvery case dismissed? Supreme Court provides explanation
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

