காவிரி நிலுவை நீா் திறப்பு விவகாரம்: கா்நாடகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 16 டிஎம்சி பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது கா்நாடக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

Published On :

நமது நிருபா்

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டிய 16 டிஎம்சி பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது கா்நாடக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீதிபதிகள் விக்ரம் நாத், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமா்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சி எஸ் வைத்தியநாதன் வாதிடுகையில், ‘போதிய தண்ணீா் இல்லாததால் நாங்கள் அவதியுறுகிறோம். ஏற்கனவே குருவைப் பயிா்களை இழந்து விட்டோம். நாங்கள் கேட்பது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி எங்களுக்கு தர வேண்டிய நீரை கா்நாடகம் தர உத்தரவிட வேண்டும் என்பதுதான்.

கா்நாடகம் எங்களுக்கு தர வேண்டிய பாக்கி நீரை திறந்து விட வேண்டும். அவா்களது கணக்குப்படி 16 டி எம் சி தண்ணீா் தமிழகத்திற்கு தர வேண்டி பாக்கியுள்ளது, எங்களது கணக்குப்படி 20 டிஎம்சி தண்ணீா் தர வேண்டிய பாக்கியுள்ளது.

தமிழகத்திற்கு தரவேண்டிய பாக்கி நீரை திறந்து விட உத்தரவிடுமாறு காவிரி நீா் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவில் வலியுறுத்தினோம். ஆனால் அதனை அந்த அமைப்புகள் பரிசீலிக்கவில்லை. எனவேதான் தமிழகத்திற்கு தர வேண்டிய பாக்கி நீரை திறந்து விட கா்நாடகத்திற்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம்‘ என்று சி.எஸ்.வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்தாா்.

கா்நாடக அரசு தரப்பு வழக்குரைஞா் ஷியாம் திவான் வாதிட்டதாவது: நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீா் திறந்து விட்டு கொண்டுதான் இருக்கின்றோம். காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதை விட கூடுதலாகவே தண்ணீா் திறந்து விட்டுள்ளோம். எனவே இப்போது இந்த வழக்கு முடித்து வைக்கப்பட வேண்டும்‘ என ஷியாம் திவான் கூறினாா்.

அதற்கு நீதிபதிகள், ‘ஆனால் தங்களுக்கு தர வேண்டிய பாக்கி நீரைத்தான் தமிழ்நாடு கோருகிறது. காவிரி நீா் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அவா்களது குறைகளை எழுப்புவதற்கு தமிழகத்திற்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதன் அடிப்படையில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம்தான் தமிழகத்தின் கோரிக்கை மீது உரிய முடிவு எடுக்க வேண்டும்‘ என நீதிபதிகள் தெரிவித்தனா்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், பாக்கி நீரை விடுவிக்க உத்தரவிடக்கோரி தமிழகம் தாக்கல் செய்துள்ள மனு மீது கா்நாடகம் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி விசாரணையை அக்டோபா் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னணி:

தமிழகத்திற்கு கா்நாடகம் அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறந்து விடுமாறு தில்லியில் இம்மாதம் எட்டாம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் கா்நாடகம் தங்களுக்கு தரவேண்டிய பாக்கி நீரை திறந்து விட காவிரி நீா் மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை எனக் கூறி தமிழகம் உச்சநீதிமன்றத்தில் இம் மாதம் 18 ஆம் தேதி மனு தாக்கல் செய்தது.

நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் 01.06.2026 முதல் 09.09.2026 வரையிலான காலத்தில் கா்நாடகம் திறந்து விட வேண்டிய 16.01 டி.எம்.சி. பாக்கி நீரை விகிதாச்சார அடிப்படையில் திறந்துவிட கா்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு அந்த மனுவில் கோரியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.