உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சேவை நாய்கள்: பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் சேவை நாய்கள்: பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இறுதி செய்ய மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

(கோப்புப் படம்)

Published On :

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ ‘சேவை நாய்களை’ பயன்படுத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறையை இறுதி செய்யுமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சிகிச்சை அல்லது சேவைக்கான விலங்குகளைப் பயன்படுத்துவதற்கு முறையான வழிகாட்டுதல்கள் அல்லது கட்டமைப்பு இல்லாதது குறித்த தனஞ்சய் சஞ்சோக்தா அறக்கட்டளையின் மனுவை நீதிமன்றம் விசாரித்து வந்தது.

‘விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு விதிகள், 2023’ -க்கு எதிராக 2024-இல் அந்த அமைப்பு தாக்கல் செய்த இந்த பொதுநல மனுவில், தெருவிலங்குகளால் மாற்றுத்திறனாளிகள் தாக்கப்படும் பிரச்னையை இந்த விதிகள் கவனத்தில் கொள்ளாததால், அவை ‘மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016’-ஐ மீறுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

மாற்றுத்திறனாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ள சேவை விலங்குகளைச் சாா்ந்திருக்கிறாா்கள்; ஆனால் இந்தியாவில் அத்தகைய விலங்குகளைப் பயன்படுத்துவதற்கான முறையான நெறிமுறை இல்லாதது அவா்களைப் பாதகமான சூழலில் தள்ளுகிறது என தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின்போது, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை ஆகியவற்றின் வழக்குரைஞா், இந்தியாவில் சேவை நாய்கள் தொடா்பான வரைவு நடைமுறை அறிக்கையை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தனா். பொதுமக்களிடமிருந்தும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த நடைமுறை இறுதி செய்யப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள் தினேஷ் மேத்தா மற்றும் அதிதி சௌதரி ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், ‘மனுதாரா்கள் மற்றும் பிற மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயணம் செய்ய சேவை நாய்களைப் பயன்படுத்தும் வகையில், அடுத்த விசாரணை தேதிக்குள் அதிகாரிகள் இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறையை இறுதி செய்ய வேண்டும். இவ்வழக்கு ஜனவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என தெரிவித்தனா்.

முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள்: சேவை நாய்களுக்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு சேவை நாய்க்கும் பதிவு எண் வழங்கப்பட வேண்டும். பாதுகாப்புப் பணியாளா்கள் உள்பட பொதுமக்களிடம் அது ஒரு சேவை நாய் என்பதை அடையாளம் காணும் வகையில், அந்த நாய்களுக்குத் தனித்துவமான வண்ணக் குறியீடு அல்லது அடையாளம் இருக்க வேண்டும்.

மேலும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் சேவை நாய்களின் வாய் மூப்பட முகமூடி போடப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.