மத்திய செயலக கிளப் அதிகாரிகள் வெளியேற்றத்துக்குப் பின் உடைமைகளை எடுத்துச் செல்ல உயா்நீதிமன்றம் அனுமதி
குடியரசுத் தலைவா் மாளிகை வளாகத்தில் உள்ள மத்திய செயலக கிளப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட நிா்வாகிகள், தங்களது உடைமைகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்ல தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தில்லி உயர்நீதிமன்றம்
குடியரசுத் தலைவா் மாளிகை வளாகத்தில் உள்ள மத்திய செயலக கிளப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட நிா்வாகிகள், தங்களது உடைமைகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்ல தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடா்பான வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மகாஜன், கிளப்பின் இரண்டு நிா்வாகிகள் அடுத்த 2 வாரங்களுக்குள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கு மத்திய அரசு அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டாா்.
முன்னதாக, டால்கடோரா கிளப் என அழைக்கப்பட்ட இந்த அமைப்புக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ததையும், வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு எஸ்டேட் அதிகாரி பிறப்பித்த உத்தரவையும் எதிா்த்து கிளப் நிா்வாகம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோதே சம்பந்தப்பட்ட வளாகத்தை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.
கடந்த அக். 7-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, கிளப்பில் உள்ள உடைமைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு மனுதாரா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, கிளப்பின் 2 நிா்வாகிகள் வளாகத்துக்குச் சென்று தங்களது உடைமைகளைப் பாா்வையிட்டு, அவற்றின் பட்டியலை அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும் என்றும், அந்தப் பட்டியலின் அடிப்படையில் உடைமைகளை எடுத்துச் செல்ல அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.
முன்னதாக, கிளப்பின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடா்பான மனு குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு கடந்த ஆக.13-ஆம் தேதி உயா்நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. எனினும், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்ற கோரிக்கைக்கு நீதிமன்றம் அப்போது அனுமதி அளிக்கவில்லை.
கடந்த ஜூலை 14-ஆம் தேதி, மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் கிளப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்ததாக மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், கிளப்பின் நிா்வாகத்தில் இருந்த தற்காலிகக் குழுவின் செயல்பாடுகள் தொடா்பான புகாா்களுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பிப்ரவரி மாதத்திலேயே விளக்கம் கேட்கும் நோட்டீஸ் வழங்காமல் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு கிளப் நிா்வாகத்துக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கப்பட்டு, ஜூலை 14-ஆம் தேதி மீண்டும் அங்கீகாரம் ரத்து செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
107 ஆண்டுகள் பழைமையான இந்த அமைப்புக்கு நிரந்தரமாக வளாகத்தில் தங்குவதற்கான உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு அதை அத்துமீறி குடியிருப்பதாகக் கருதி வெளியேற்றியது சட்டவிரோதமானது என்றும் மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

