தில்லி செல்லும் ரயில்கள் ரத்து! சிஜேபி போராட்டத்தை முடக்குகிறதா மத்திய அரசு?
சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு தில்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...

புதுதில்லி ரயில் நிலையம் - ANI
புது தில்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தவுள்ள நிலையில், நாடு முழுவதிலுமிருந்து தில்லி நோக்கிச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதற்கு போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டினாலும், போராட்டத்தில் பங்கேற்கச் செல்பவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவும் இந்த நடவடிக்கையின் மீதான பார்வை மாறியிருக்கிறது.
நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) என்ற பெயரில் லட்சக்கணக்கான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, அவா் பதவி விலக / பதவி நீக்க வலியுறுத்தி சிஜேபி மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
தில்லியில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் சூழலில், சிஜேபி சார்பில் சனிக்கிழமை காலை ஜந்தர் - மந்தரில் மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜிநாமா செய்ய வலியுறுத்தி ஜந்தர் - மந்தரில் சிஜேபி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அவர்களின் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்தார்.
இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டத்தை தொடரவுள்ளதாக சிஜேபி அறிவித்துள்ளது.
முன்னதாக, ஞானேஷ் குமாருக்கு எதிராக மும்பை சிவாஜி பூங்கா, பெங்களூரு சுதந்திரப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் போராட்டத்தை நடத்தியுள்ள சிஜேபி, ஜந்தர் மந்தரில் நாளை மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆனால், சிஜேபி போராட்டத்துக்கு அனுமதி மறுத்துள்ள தில்லி காவல்துறை, ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கூட்டத்திலும் மக்கள் பங்கேற்பதைத் தவிா்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், தில்லியின் முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு, தடுப்புகள் அமைத்து, 20,000-க்கும் அதிகமான காவலா்கள், பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரயில்கள் ரத்து
நாடு முழுவதும் உள்ள மண்டல ரயில்வே மேலாளர்களுக்கு இந்திய ரயில்வே துறையின் பயணிகள் போக்குவரத்துத் துறையின் முதன்மை நிர்வாக இயக்குநர் ஒரு சுற்றறிக்கையை இன்று அனுப்பியுள்ளார்.
அதில், “புது தில்லி மற்றும் ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 10 அன்று கடுமையான சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பின்வரும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 9) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு புறப்பட்டு அக்டோபர் 10 அன்று அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை புது தில்லி அல்லது ஹச்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களை வரும் அனைத்து மெயில் / விரைவு ரயில்களும் அவை புறப்படும் இடத்திலேயே ரத்து செய்யப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்திலிருந்து ஹச்ரத் நிஜாமுதீனுக்கு இன்று மாலை 4 மணிக்கு புறப்படும் ராஜதானி விரைவு ரயிலை மத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.

இதேபோல், மேற்கு வங்கத்தின் ஹெளரா மற்றும் சியால்டா ரயில் நிலையங்களிலிருந்து இன்று மாலை புதுதில்லி ரயில் நிலையம் செல்லும் 2 ராஜதானி விரைவு ரயில்களை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் சிஜேபி போராட்டத்தை குறிப்பிடாமல், கடுமையான சாலைப் போக்குவரத்து நெரிசல் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வேவின் அறிக்கையை குறிப்பிட்டு இணையத்தில் மக்கள், பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தில்லியில் சிஜேபி நடத்தும் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றால், புதுதில்லி மற்றும் ஹச்ரத் நிஜாமுதீன் நோக்கி வரும் ரயில்களை அதற்கு முன்பிருக்கும் பெரிய ரயில் நிலையங்களில் நிறுத்தாமல், முழுமையாக ரத்து செய்யப்படுவது ஏன்? என்ற கேள்வி இணையத்தில் எழுப்பப்படுகிறது.
மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து புதுதில்லி போராட்டத்தில் கலந்துகொள்ள வருபவர்களை வரவிடாமல் முடக்குவதற்காக இந்த திட்டமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், தில்லியில் உள்ள 57 மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்றிரவு 9 மணிமுதல் மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சிஜேபி போராட்டத்தை ஒடுக்குவதற்காக ரயில் போக்குவரத்தை மத்திய அரசு முழுமையாக முடக்குவதால், தில்லியில் அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்வோரின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
Summary
Trains to Delhi cancelled! Is the Central Government stifling the CJP protest?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


