தில்லி, நொய்டா பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தில்லி மற்றும் நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது பற்றி...

தில்லி மற்றும் நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய்கள், காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளுக்கு மிரட்டல்கள் வந்ததைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்புச் சோதனைகள் நடைபெற்று வருவதாக அந்த மாவட்ட காவல் துறை மக்கள் தொடா்பு அதிகாரி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘திங்கள்கிழமை கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இதையடுத்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள், மோப்ப நாய்கள், காவல் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறையினா் சம்பந்தப்பட்ட இடங்களில் பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலும் கெளதம் புத்தா நகா் மாவட்டத்தில் மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. பின்னா் அவை புரளி எனத் தெரியவந்தது.
குடியரசு தினத்துக்கு முன்னதாக ஜனவரி 23-ஆம் தேதி நொய்டாவில் சுமாா் 20 பள்ளிகளுக்கு மிரட்டல் மின்னஞ்சல்கள் வந்தன. அதைத் தொடா்ந்து, பொதுத் தோ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பிப்ரவரி 19-ஆம் தேதி 18 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஜூலை 13-ஆம் தேதி கிரேட்டா் நொய்டாவில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மூன்று சம்பவங்களிலும் விரிவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், மிரட்டல்கள் உண்மையானவை அல்ல என்பது தெரியவந்தது.
இதற்கிடையே, தில்லியின் ரோஹிணி பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, அங்கு சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வெங்கடேஷ்வா் குளோபல் பள்ளி மற்றும் மவுண்ட் அபு பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் தொடா்பாக அழைப்பு வந்ததாக தில்லி தீயணைப்புத் துறை தெரிவித்தது.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறுகையில், ‘சோதனை நடைபெற்று வருகிறது. இதுவரை சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

