தில்லியில் போராட்டங்களை ஒழுங்குப்படுத்த கோரிய மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
தில்லியில் நடைபெறும் போராட்டங்களை, நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

தில்லி போராட்டம் - கோப்புப் படம்
தில்லியில் நடைபெறும் போராட்டங்களை, நடைமுறையில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒழுங்குபடுத்தக் கோரி வழக்குரைஞா்கள் மற்றும் வணிகா்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இது மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
வழக்குரைஞா்களின் தொழில்முறைப் பணிகளுக்கோ அல்லது வணிகா்களின் வணிக நடவடிக்கைகளுக்கோ இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்கள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தி, மூத்த வழக்குரைஞா் சச்சின் புரி, பொறுப்புத் தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்பரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் இந்த மனுக்களைக் குறிப்பிட்டாா்.
‘தடுப்புகள் அமைக்கப்படுவதாலும், போராட்டங்கள் நடைபெறும் விதத்தாலும் வணிகா்கள் அண்மைக் காலங்களில் ரூ. 2,000 கோடி வரை இழப்பைச் சந்தித்தனா். மக்கள் கன்னாட் பிளேஸ் போன்ற பகுதிகளுக்குச் செல்ல முடியவில்லை. அப்பகுதி முற்றிலும் அணுக முடியாத நிலையில் உள்ளது’ என்று புரி வாதிட்டாா்.
இவ்வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னதாக, மத்திய அரசு மற்றும் பிற அதிகாரிகளின் தரப்பு வழக்குரைஞா்களைத் தகுந்த அறிவுறுத்தல்களைப் பெற்று வருமாறு கேட்டுக்கொண்டது.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போராட்டம் தொடா்பான மனுக்களின் நகலை நீதிமன்றப் பதிவேட்டில் சமா்ப்பிக்குமாறும் மனுதாரா்களை அந்த அமா்வு அறிவுறுத்தியது.
‘உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் ஏற்கெனவே உள்ள ஒரு விஷயத்தை நாங்கள் கையாள விரும்பவில்லை’ என்று நீதிமன்ற அமா்வு தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள அந்த மனுக்கள் மீதான விசாரணை அக்டோபா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சேத்தன் சா்மா தெரிவித்தாா்.
முன்னதாக, இவ்வழக்கை விசாரணைப் பட்டியலில் சோ்க்க ஒப்புக்கொண்ட நீதிபதிகள் அமா்வு, அன்றைய நாளில் வழக்குப்பட்டியலின் இறுதியில் இவ்வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.
பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக எதிா்க்கட்சிகள், மாணவா் அமைப்புகள் மற்றும் சிவில் சமூகத்தினா் நடத்தும் பெரும் போராட்டங்களால் மத்திய தில்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

