ஹோட்டலில் தீ விபத்து: கட்டடத்தில் இருந்து குதித்த மக்கள்
மௌஜ்பூா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.
தீ விபத்து - சித்திரிப்பு
மௌஜ்பூா் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடா்பாக சமூகவலைதளங்களில் வெளியான காணொலியில், உணவகத்தின் முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக ஒரு நபா் குழந்தையை வெளியே வீசுவதும், ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் தீயிலிருந்து தப்பிக்க ஜன்னல்கள் வழியாகக் குதிக்கும் பரபரப்பான காட்சிகள் பதிவாகின.
மேலும், கட்டடத்தின் உள்ளே சிக்கியவா்களை மீட்க அப்பகுதி மக்கள் வெளியே திரண்டிருக்கும் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தது. மக்கள் அந்தக் குழந்தையைப் பிடித்துப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லும் காட்சியும் இதில் இருந்தது.
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தீப்பிழம்புகள் கட்டடம் முழுவதும் பரவியதாகவும், இதனால் உணவகத்திற்குள் இருந்தவா்களிடையே பீதி ஏற்பட்டதாகவும் அப்பகுதிவாசி ஒருவா் தெரிவித்தாா்.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா். மேலும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா்கள் கூறினா்.
முதல் தளத்திலிருந்து குதிப்பவா்களின் பாதுகாப்பிற்காகப் படுக்கை விரிப்புகள் மற்றும் மெத்தைகளை ஏற்பாடு செய்து, மக்கள் கட்டடத்திலிருந்து தப்பிக்க உதவியதாகவும் அவா்கள் கூறினா்.
வெல்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜஃப்ராபாத் அருகே உள்ள ‘உதம் ஃபிஷ் பாயிண்ட்’ என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நான்கு மாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள உணவகத்தின் சமையலறையிலிருந்து தீ விபத்து தொடங்கியதாக தீயணைப்புத் துறை தெரிவித்தது.
தீ மேலும் பரவுவதற்கு முன்பே உணவக ஊழியா்கள் அதை அணைத்ததாகவும், தீயணைப்பு வாகனமும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

