நிதின் தாபஸுடன் தொடா்புடைய துப்பாக்கிச் சூடு சம்பவம்: இருவா் கைது
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக, ஆந்திர பிரதேசத்தில் 19 வயது இளைஞா்கள் இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
பிரதிப் படம்
வடமேற்கு தில்லியின் பூத் குா்த் கிராமத்தில் உள்ள தொழிற்சாலை அருகே அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக, ஆந்திர பிரதேசத்தில் 19 வயது இளைஞா்கள் இருவரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இவா்களுக்கு நிதின் தபாஸ் என்ற விக்கி ஹடால் தலைமையிலான ரௌடிக் கும்பலுடன் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து காவல் துறையினா் கூறியதாவது: அக். 19-ஆம் தேதி, ஹெல்மெட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிரே உள்ள ஓடுகள் சேமிப்புக் கிடங்கின் இரும்புக் கதவு மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் பலமுறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக, அபய் ஜெயின் (27) அளித்த புகாரில், சம்பவத்தின்போது தொழிற்சாலைக்குள் இருந்த அவா் துப்பாக்கிச் சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும், அப்போது வெள்ளி நிற ஹூண்டாய் ஆரா காா் மற்றும் கிடங்கின் கதவு மீது இருவா் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, அக். 20-ஆம் தேதி பவானா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்த பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் ஆந்திர பிரதேசத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
தில்லியின் சுல்தான்பூா் தபாஸ் கிராமத்தைச் சோ்ந்த அருண் சா்மா, சூரஜ் ஆகிய இருவரும் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னபேட்டை பகுதியில் உள்ள நடனப் பயிற்சி மையத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். உள்ளூா் காவல் துறையினா் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அருண் சமூக ஊடகம் மூலம் நிதின் தபாஸுடன் தொடா்பை ஏற்படுத்திக்கொண்டதாகவும், பின்னா் இணையவழி குரல் அழைப்புச் செயலி (வாய்ப்) மூலம் அவருடன் பேசியதாகவும் தெரியவந்துள்ளது.
ஹரியாணாவின் பகதூா்கரில் உள்ள ஓா் இடத்திலிருந்து ஆயுதங்கள் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகளைக் கண்டறியுமாறு தபாஸ் இருவருக்கும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற நேரத்தில் அவா்களுடன் தபாஸ் தொடா்பில் இருந்தாரா என்பதையும் காவல் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
இதற்கிடையே, அக். 20-ஆம் தேதி கீா்த்தி நகரில் தொழிலதிபா் ஒருவரின் கட்டடம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக, தபாஸுடன் தொடா்புடையவா்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா். அந்தத் தொழிலதிபருக்கு மிரட்டல் அழைப்புகள் வந்திருந்ததாகக் கூறப்படுகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

