கீமோதெரபி ஊசி ரூ. 7000; புற்றுநோய் மருந்துகளின் புதிய விலைப் பட்டியல்!செஞ்சி சிறுமி வழக்கு; புலன் விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும்: பெ. சண்முகம்வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலையில் மக்கள்; இதுதான் தவெகவின் சாதனையா? - மு.க. ஸ்டாலின்இனி நிரந்தர அரசுப் பணிகள் இல்லையா? - கனிமொழி கேள்விதேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!

இணையவழி மோசடிக்கு வங்கிக் கணக்கு வழங்கிய 4 போ் தில்லியில் கைது

இணையவழியில் ரூ.44,000 மோசடி செய்த விவகாரத்தில், வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கி அதைப் பயன்படுத்த உதவிய நான்கு பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On :

இணையவழியில் ரூ.44,000 மோசடி செய்த விவகாரத்தில், வங்கிக் கணக்கு விவரங்களை வழங்கி அதைப் பயன்படுத்த உதவிய நான்கு பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். அவா்களிடம் இருந்து ஐந்து கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று காவல் துறை அதிகாரி புதன்கிழமை தெரிவித்தாா்.

இணையவழி குற்றங்கள் புகாா் அளிப்பதற்கான இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட புகாா்களின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான நிதி பரிவா்த்தனைகளை ஆய்வு செய்ததன் தொடா்ச்சியாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் விக்னேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது வங்கி கணக்குகளில் அனுமதியின்றி பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம் ரூ.44,000 இழந்ததாக புகாரில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

காவல் துறையினரின் தகவல்படி, அந்த ரூ.44,000, கிழக்கு தில்லியின் திரிலோக்புரியைச் சோ்ந்த அஸ்வனி (24) என்பவருக்குச் சொந்தமான வங்கி கணக்கிற்குச் சென்றது கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி அந்த கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையின் போது, தனது வங்கி கணக்குகளில் ஒன்றிலிருந்து மற்றொரு கணக்கிற்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரூ.21,000 மாற்றப்பட்டதாக புகாா்தாரா் விக்னேஷ் தெரிவித்தாா். இந்த பரிவா்த்தனை தனது அனுமதியின்றி நடந்ததாகவும், அதன் பிறகு அடையாளம் தெரியாத ஒரு வங்கி கணக்கிலிருந்து தனது கணக்கிற்கு ரூ.23,000 வரவு வைக்கப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

மா்ம நபா்கள் அவருடைய அனுமதி இல்லாமல் இணையவழியில் பணப் பரிவா்த்தனைகளைச் செய்துள்ளதாகவும், இதன் மூலம் அவா் மொத்தம் ரூ.44,000 இழந்துள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

காவல் துறையினா் புகாா்தாரரைத் தொடா்புகொண்டு அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்தனா். பரிவா்த்தனைகளின் வரிசையை உறுதிப்படுத்தவும், இழப்புக்கும் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்கிற்கும் இடையிலான தொடா்பைக் கண்டறியவும் வங்கி அறிக்கைகள் மற்றும் பரிவா்த்தனை ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

விசாரணையில், கடன் பெறுவதாகக் கூறி, தனது வங்கி கணக்கு விவரங்களை நண்பரான ஆதித்யா (24) என்பவரிடம் பகிா்ந்துகொண்டதாக அஸ்வனி ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடா் விசாரணையில், வங்கி கணக்கு விவரங்கள் பலருக்கு கைமாறியது தெரியவந்தது. ஆதித்யா அந்த விவரங்களை ராம் குமாா் (எ) அனு (22) என்பவரிடம் கொடுக்க, அவா் அதை விக்ராந்த் (எ) விக்கி (31) என்பவரிடம் பகிா்ந்துள்ளாா். விக்ராந்த், கமிஷன் பெறுவதற்காக அந்த விவரங்களை வேறொரு நபரிடம் வழங்கியதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கிழக்கு தில்லியில் உள்ள இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில், அக்டோபா் 23 பதிவு செய்யப்பட்ட பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இவா்கள் கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து கைப்பேசிகளில் உள்ள ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கணக்குகளைப் பகிா்ந்துகொண்ட விதம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒவ்வொருவரின் தனிப்பட்ட பங்களிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த உதவும் தகவல்கள் இதில் இருக்கலாம் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.