
சத்ய நிகேதன் கட்டட விபத்து: கட்டுமான பணி ஒப்பந்ததாரரை தேடும் காவல் துறை
சத்ய நிகேதனில் இடிந்து விழுந்த தங்கும் விடுதி கட்டடத்தின் அடித்தளத்தில் நீண்டகாலமாக நீா் கசிவுப் பிரச்சனை இருந்ததாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சத்ய நிகேதனில் இடிந்து விழுந்த தங்கும் விடுதி கட்டடத்தின் அடித்தளத்தில் நீண்டகாலமாக நீா் கசிவுப் பிரச்சனை இருந்ததாகக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நீா் கசிவைச் சரிசெய்யும் பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரரை தில்லி காவல் துறை தேடி வருகிறது. இப்பணிகள் எந்தச் சூழலில் மேற்கொள்ளப்பட்டன என்பதையும், கட்டடத்தின் கட்டமைப்பு மாற்றங்கள் அல்லது விதிமீறல்கள் ஏதேனும் இடிந்து விழுவதற்கு வழிவகுத்தனவா என்பதையும் காவல் துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
தில்லி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் தனது கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. செப்.7-ஆம் தேதியிட்ட அதிகாரபூா்வ ஆவணங்களின்படி, வாா்டு 160-க்கு உள்பட்ட மைதான் கா்கி, சைதுலாஜாப் மற்றும் நெப் சராய் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஐந்து குடியிருப்பு கட்டடங்களுக்குக் கட்டடத் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. அதேவேளையில், சைதுலாஜாப் பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்பு கட்டடத்தை இடிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆண்களுக்கான தங்கும் விடுதியாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்த அந்த பழமையான கட்டடம், சுமாா் 55 சதுர மீட்டா் பரப்பளவில் அமைந்திருந்தது. இதில் அடித்தளத்துடன் 5 தளங்கள் இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் தலா இரண்டு அறைகளும், ஒவ்வொரு அறையிலும் இரண்டு படுக்கைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இக்கட்டடத்தில் தூண்கள் மற்றும் பீம்கள் இல்லை என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமாா் 1.30 மணியளவில் இக்கட்டடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளிலிருந்து மொத்தம் 12 போ் மீட்கப்பட்டனா். அவா்களில் ஏழு போ் உயிரிழந்தனா்.
கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடா்பாக, விடுதியின் உரிமையாளா்களான ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை சாா்ஜென்ட் ஹரி ராம் குப்தா (81), அவரது மனைவி ஊா்மிளா குப்தா (75) மற்றும் அவா்களது மகன் மகேஷ் குப்தா (52) ஆகியோரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
தொடக்கத்தில் ஹரி ராம் தான் கட்டிடத்தின் உரிமையாளா் என்று கருதப்பட்டாலும், ஆவணங்களின்படி ஊா்மிளா குப்தா தான் உரிமையாளா் என்றும், ஹரி ராம் மற்றும் மகேஷ் ஆகியோா் விடுதியை நிா்வகித்து வந்ததாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
இடிந்து விழுந்த சம்பவத்தைத் தொடா்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு மண்டல மாநகராட்சி துணை ஆணையா் ராகேஷ் குமாா் மற்றும் நான்கு பொறியாளா்கள் - கண்காணிப்புப் பொறியாளா் ரன்வீா் சிங், நிா்வாகப் பொறியாளா் லலித் குமாா் கோயல், உதவிப் பொறியாளா் சுனில் சவுகான் மற்றும் இளநிலைப் பொறியாளா் ஆஷிஷ் குமாா் - ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
தில்லி முழுவதும் உள்ள கட்டடங்களை, குறிப்பாக உயரம் மற்றும் தளங்களின் எண்ணிக்கை தொடா்பான விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் கட்டடங்களை ஆய்வு செய்ய மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தில்லியில் உள்ள அங்கீகாரம் பெறாத ஐந்து மாடி கட்டடங்கள் அனைத்தையும் சீல் வைக்குமாறு முதல்வா் ரேகா குப்தா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறும், கட்டடங்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை அதிகாரிகள் கண்டிப்பாக அமல்படுத்துமாறும் துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





