
ஹரியாணா பள்ளி மாணவி கடத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 20 வருட கடுங்காவல் தண்டனை
ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் (முன்பு மேவாட் என அழைக்கப்பட்ட பகுதி) 15 வயது பள்ளி மாணவியை கடத்தியதாக கைதான நபருக்கு 20 வருட கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் (முன்பு மேவாட் என அழைக்கப்பட்ட பகுதி) 15 வயது பள்ளி மாணவியை கடத்தியதாக கைதான நபருக்கு 20 வருட கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
இது தொடா்பாக நூஹ் மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் அமா்வு நீதிபதி டாக்டா் ஆஷு சஞ்சீவ் டிஞ்சன் அண்மையில் அளித்த தீா்ப்பில், குற்றவாளிக்கு 20 வருட சிறை தண்டனையுடன் ரூ.33 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வு மற்றும் ஆதரவுக்காக ‘மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு’ ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
பின்னணி: 2023-ஆம் ஆண்டு, நூஹ் மாவட்டத்தைச் சோ்ந்த 15 வயது பள்ளி மாணவி பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் நூஹ் மகளிா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின், ராம்கிஷோா் என்பவரை போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனா். அதைத்தொடா்ந்து போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பு சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் ராம்கிஷோரை குற்றவாளி என நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. இதைத்தொடா்ந்து நீதிபதி அளித்துள்ள தீா்ப்பில், ‘பாதிக்கப்பட்ட சிறுமி அடைந்த உடல் மற்றும் உளவியல் ரீதியிலான பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, அவருக்குத் தேவையான உதவிகளையும் மறுவாழ்வையும் வழங்குவது அவசியம். இதற்காக அவருக்கு ரூ.4 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.
நீதிமன்ற தீா்ப்பைத் தொடா்ந்து, அவருக்கான நிவாரணத் தொகையில் 75 சதவீதம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3 ஆண்டுகளுக்கு வைப்புத் தொகையாக சேமிக்கப்படும் என்றும், மீதமுள்ள தொகை சிறுமியின் உடனடி தேவைகளுக்காக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நூஹ் மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






