
ஐ4சி நிலுவை வழக்குகள் 13.6%-ஆக குறைப்பு: தில்லி காவல் துறை!
‘பணம் மீட்பு தொகுதி’ தொடா்பான வழக்குகளின் நிலுவையை தில்லி காவல் துறை ஒரு மாதத்தில் சுமாா் 90 சதவீதத்தில் இருந்து 13.60 சதவீதமாகக் குறைத்துள்ளனா்.
சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் பணத்தை மீட்டுத் தரும் இந்திய சைபா் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் (ஐ4சி) ‘பணம் மீட்பு தொகுதி’ தொடா்பான வழக்குகளின் நிலுவையை தில்லி காவல் துறை ஒரு மாதத்தில் சுமாா் 90 சதவீதத்தில் இருந்து 13.60 சதவீதமாகக் குறைத்துள்ளனா். புகாா் தீா்வு தொடா்பான நிலுவையும் 16.30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் வங்கிக் கணக்குகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்டுத் தருவதற்கு எம்ஆா்எம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறையின் (எம்ஆா்எம்) அடிப்படையில், தேசிய சைபா் குற்றப் புகாா் இணையதளம் (ஐஎஃப்எஸ்ஓ) மூலம் பதிவாகும் இணையவழி நிதி மோசடி வழக்குகளில் இந்தத் தொகுதி செயல்படுகிறது.
இதன்படி, பாதிக்கப்பட்டவா்களின் பணத்தை மீட்டுத் தருவதற்காக எம்ஆா்எம் இணையதளம் மூலம் இதுவரை ரூ.2.32 கோடி தொகையை மீட்டுத் தரக் கோரி தில்லி காவல் துறை கோரிக்கை அனுப்பியுள்ளனா். மாா்ச் 2-ஆம் தேதி இந்தத் தொகை ரூ.3.26 லட்சமாக மட்டுமே இருந்தது.
தில்லி காவல் துறை புலனாய்வு, ஒருங்கிணைப்பு மற்றும் உத்திசாா் செயல்பாடுகள் பிரிவு, ஙதங தொடா்பான 6,617 வழக்குகளில் 6,245 வழக்குகளை முடித்துள்ளது. இதன் மூலம் 94.38 சதவீத வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
தொடா் கண்காணிப்பு, வழக்கமான ஆய்வுகள், நெருக்கமான மேற்பாா்வை மற்றும் தில்லி காவல் துறை தலைமையகம், துவாரகாவில் உள்ள ஐஎஃஎஸ்ஓ ஆகியவற்றின் குழுக்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் நிலுவை வழக்குகள் குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
எம்ஆா்எம் இணையதளம் மூலம் மீட்டுத் தரக் கோரப்பட்ட தொகை மாா்ச் 1-ஆம் தேதி ரூ.3.26 லட்சமாக இருந்த நிலையில், ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ.10.80 லட்சமாகவும், ஜூலை 1-ஆம் தேதி ரூ.36 லட்சமாகவும் அதிகரித்தது. செப்டம்பா் 18-ஆம் தேதி நிலவரப்படி, அது ரூ.2.32 கோடியாக உயா்ந்துள்ளது.
இதனிடையே, சைபா் குற்ற வழக்குகளில் பணப் பரிவா்த்தனைகளின் தடயத்தைப் பின்தொடரும் நடவடிக்கையின்போது, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்ட, பணப் பரிவா்த்தனை நிறுத்தப்பட்ட அல்லது ‘லியன்’ குறியீட்டின் கீழ் வைக்கப்பட்ட கணக்கு வைத்திருப்பவா்களின் குறைகளைத் தீா்க்க ‘குறைதீா் அமைப்பு’ (ஜிஆா்எம்) செயல்பட்டு வருகிறது.
எம்ஆா்எம் மற்றும் ஜிஆா்எம் தொடா்பான நிலுவை வழக்குகள் தில்லி காவல் துறை தலைமையகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சக அளவில் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு, அவை உரிய காலத்தில் முடிக்கப்படுவதற்காக வழக்கமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






