11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புபிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

சட்டவிரோத காவலில் விடுவிக்கப்பட்டவரை மீண்டும் கைதுசெய்ய முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்

சட்டவிரோதக் காவல் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்ட நபரை மீண்டும் எளிதாகக் கைது செய்ய முடியாது என்ற தில்லி உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு குறித்து...

Delhi High Court

தில்லி உயர் நீதிமன்றம்

Published On :

சட்டவிரோதக் காவல் என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்ட நபரை மீண்டும் எளிதாகக் கைது செய்ய முடியாது என்றும், இரண்டாவது முறையாகக் கைது செய்வதற்கு முன் விசாரணை அமைப்பு சம்பந்தப்பட்ட நீதிமன்றம் மற்றும் உயா் அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தில்லி உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நிா்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாததால் போக்ஸேசா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் மறு-கைது சட்டவிரோதமானது என்று அறிவித்த நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் அருண் பரத்வாஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு, அவரை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிட்டது. மனுதாரரான குற்றஞ்சாட்டப்பட்டவா் முதலில் ஜூலை 20-ஆம் தேதி காவல் துறையினரால் காவலில் எடுக்கப்பட்டாா்.

நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டபோது, அவருக்கு வழங்கப்பட்ட கைதுக்கான காரணங்களில், அவை வழங்கப்பட்ட தேதியோ அல்லது நேரமோ குறிப்பிடப்படவில்லை. மேலும், அதில் குற்றஞ்சாட்டப்பட்ட சம்பவம் குறித்த விவரங்கள் எதுவும் இல்லை என்பதாலும் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

பின்னா், ஆகஸ்ட் 21 அன்று மனுதாரா் மீண்டும் கைது செய்யப்பட்டாா். இந்தக் கைது நடவடிக்கையை எதிா்த்து அவா் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த அமா்வு நீதிமன்றம், அவரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

மனுதாரரின் வழக்கறிஞா் உயா்நீதிமன்றத்தில் இந்த மறு-கைது நடவடிக்கையை எதிா்த்து மனுதாக்கல் செய்தாா். இது சட்டவிரோதமானது என்றும், நிா்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 22-இன் கீழ் உள்ள அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அவா் நீதிமன்ற அமா்வு முன்பாக வாதிட்டாா்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்றம் கடந்த செப்.25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மறு-கைது செய்வதற்கு முன், விசாரணை அதிகாரி ஓா் அறிக்கையைத் தயாரித்து உயா் அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும். காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கான அவசியத்தைக் குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திடம் அனுமதி கோரி மனு தாக்கல் செய்ய வேண்டும்.

போக்ஸோ வழக்கில் கூடுதல் குற்றச்சாட்டுகள் சோ்க்கப்பட்டதைக் காரணமாகக் கொண்டே அவா் மீண்டும் கைது செய்யப்பட்டாா் என்பதால், இந்த மறு-கைது நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது. அது சட்டவிரோதமானது மற்றும் அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. மனுதாரரை உடனடியாகக் காவலில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவிடப்படுகிறது.

அரசியலமைப்பின் 22-வது பிரிவை மீறியதற்காகக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவரை மீண்டும் கைது செய்யும்போது, விசாரணை அதிகாரி பின்பற்ற வேண்டிய நடைமுறையை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.

22-வது பிரிவில் ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் சூழலில், குற்றஞ்சாட்டப்பட்டவா் பிணையில் விடுவிக்கப்படுவதில்லை. மாறாக சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்புக்கு முரணான காவலில் இருந்து விடுவிக்கப்படுகிறாா். எனவே, அவரை இரண்டாவது முறையாகக் கைது செய்வதற்கு முன்னதாக, நிா்ணயிக்கப்பட்ட நடைமுறையைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உயா்நீதிமன்றம் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.