கோவில்பட்டி, ஆக. 4: பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்ட எட்டையபுரத்தை மையமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மகாகவி பாரதியார் பிறந்த ஊரான எட்டையபுரத்தில் பாரதியார் இல்லம், பாரதியார் நூற்றாண்டு நினைவு மணிமண்டபம், பாரதியின் தகவல்களை உள்ளடக்கிய பாரதி ஆவண காப்பகம், பாரதியாரின் நூற்றாண்டு நினைவு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் இருந்தன. இந்நிலையில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட இளையரசனேந்தல் குறுவட்டத்திற்குள்பட்ட 12 ஊராட்சிகளும் இணைக்கப்பட்டதால் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது 50 ஊராட்சிகள் உள்ளன.
இதேபோல கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்தில் 45 ஊராட்சிகளும், விளாத்திகுளத்தில் 51 ஊராட்சிகளும்,புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளும் உள்ளன.
கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஒருசில ஊராட்சிகளை உள்ளடக்கிய, மொத்தம் 56 வருவாய் கிராமங்களை கொண்டது எட்டையபுரம் வட்டமாகும்.
இதைச்சுற்றியுள்ள கிராம மக்கள் வருமானச் சான்று, சாதிச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் உள்ள நலத் திட்டங்களை பெறுவதற்கு எட்டையபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும்.
அதுபோல, இப் பகுதியிலுள்ள ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் மகளிர் சுயஉதவிக் குழுக்கான மானிய கடன், திருமண உதவித் திட்டம், மகப்பேறு உதவித் திட்டம் உள்ளிட்ட அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், அப் பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, எட்டையபுரம் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய் கிராமங்களை எட்டையபுரத்தை மையமாக வைத்து ஊராட்சி ஒன்றியம் அமைத்தால், மக்கள் அரசின் நலத் திட்ட உதவிகளை பெறுவதில் காலவிரயமோ, பண விரயமோ ஏற்படாது என்பதே பொதுமக்களின் கருத்து.
இதுமட்டுமன்றி, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஊராட்சி செயல்பாடுகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கும், அனைத்து மக்களுக்கும் எளிதாக இருக்கும்.
எட்டையபுரத்தை மையமாக வைத்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமையுமானால் ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைவதோடு நிர்வாகப் பணி எளிதாகும்.
இதுமட்டுமன்றி, ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்தால், யாருடைய உதவியுமின்றி எளிதாக அலுவலகத்தைச் சென்றடையவதோடு, அரசின் திட்டங்களை எளிதாகப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பாரதியார் பிறந்த ஊரான எட்டையபுரத்தை மையமாக வைத்து,புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எட்டையபுரம் வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட ஊராட்சி மன்ற பொதுமக்களின் கோரிக்கை.
தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி வைப்பாரா என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.