வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழில் முடக்கம்

சங்கரன்கோவில், ஜன 8:சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கோரி 33 நாள்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால், 5000 விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன.10,000 தொழிலாளர்கள் பட்டினியால் பரிதவிக்கிறார்கள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 10:41 am

மு. ஈஸ்​வ​ர​மூர்த்தி

சங்கரன்கோவில், ஜன 8:சங்கரன்கோவிலில் கூலி உயர்வு கோரி 33 நாள்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதால், 5000 விசைத்தறிகள் மூடப்பட்டுள்ளன.10,000 தொழிலாளர்கள் பட்டினியால் பரிதவிக்கிறார்கள்.மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக் குறியாகியுள்ளது.

சங்கரன்கோவிலில் 1968 வரை கைத்தறித் தொழிலே அமோகமாய் இருந்தது. அரசு மானிய விலையில் நூல் கொடுத்ததால், 20,21,எண்கள் உள்ள காட்டன் சேலைகள்,வேட்டிகள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டன.விற்பனையிலும் சங்கரன்கோவில் துணிகள் கொடிகட்டிப் பறந்தன.

1968-க்கு பிறகு விசைத்தறித் தொழில் சங்கரன்கோவிலில் நுழைந்தது. அப்போது, ரேயான் நூலில் நெய்யப்பட்ட வேட்டி,சேலைகள் பஞ்சாப், மேற்கு வங்கம், ஒரிசா, பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டன. அப்போதும் ரேயான் நூல்களை மானிய விலையில் அரசு வழங்கியது. இதனால், உற்பத்தியாளர்களுக்கு சதவிகித லாபம் இருந்தது.

1973-ம் ஆண்டு முதல் ரேயான் துணிகளுக்கு கடும் கிராக்கி இருந்தது. விலையும்

குறைவு. உழைப்பும் அதிகம் என்பதால் இந்த துணிக்கு தனி மவுசு இருந்தது. நாளாவட்டத்தில் ரேயான் நூலின் விலை தாறுமாறாக உயர்ந்தது. அரசு அளித்த மானியமும் நிறுத்தப்பட்டது. இதனால், உற்பத்தியாளர்கள் ரேயான் துணி உற்பத்தியை நிறுத்தினர். அப்போது பல கோடி மதிப்புள்ள துணிகள் தேக்கம் அடைந்தன.

இவற்றை அடிமாட்டு விலைக்கு விற்றனர்.

பின்னர், ரேயான் நூலை விóட்டுவிட்டு, காட்டன் துணி உற்பத்தியைத் தொடங்கினர். சொந்தமாக நூல் வாங்கி துணியை உற்பத்தி செய்தவர்கள் அருப்புக்கோட்டை, அம்பை, தளவாய்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர் ஆகிய இடங்களில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பாவு வாங்கி துணி நெய்து கொடுத்து அதற்கான கூலியை மட்டும் பெற்றுக் கொண்டார்கள். இதேநிலைதான் இப்போதும் நீடிக்கிறது.

இங்கு உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக, நியூயார்க்,அட்லாண்டா,வாஷிங்டன். சான்பிரான்சிóஸ்கோ ஆகிய இடங்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மேஜை விரிப்புகள்,தரை விரிப்புகளில், 70 சதவிகிதம் சங்கரன்கோவிலில் இருந்து அனுப்பப்பட்டவை என்பது குறிóப்பிடத்தக்கது.

2000-ம் ஆண்டு மத்திய அரசு போக்ரான் அனுகுண்டு சோதனை நடத்தியதால், இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதனால், சங்கரன்கோவிலுக்கு குறிப்பிட்ட பெரிய உற்பத்தியாளர்களுக்கு கொடுத்திருந்த துணி ஆர்டர்களை ரத்து செய்தனர். அந்த ஆர்டர் அனைத்தும் சீனாவுக்கு சென்றது. இதனால், சங்கரன்கோவிலில் மீண்டும் விசைத்தறித் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. இருப்பினும், 60-ம் எண் காட்டன் சேலை ரகங்கள், லுங்கிகள் உற்பத்திசெய்யப்பட்டு வந்தன.

2002-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கு உற்பத்தி செய்யப்பட்ட காட்டன் சேலைகளுக்கு

நல்ல பெயர் ஏற்பட்டது. பொதுவாக உலக அளவில் இந்தியாவில் காட்டன் நூலுக்கு அதிக வரவேற்பு உள்ளது. பஞ்சின் குழைவுத் தன்மையும்,தண்ணீரை உறிஞ்சக் கூடிய தன்மையும்தான் அதற்கு காரணம். வசதி படைத்த குடும்பங்களில் உள்ள பெண்கள்

இந்த சேலைகளை விரும்பி அணிவதால்,இன்று வரை தொடர்ந்து விற்பனையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில் கூலி உயர்வு கோரி விசைத்தறித் தொழிலாளர்கள் கடந்த 33 நாள்களாகப் போராடி வருகின்றனர். இதனால், சங்கரன்கோவிலில் மீண்டும் துணி உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோடிக் கணக்கான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால் விசைத்தறித் தொழில் அடியோடு நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.

இதனிடையே, டிசம்பர் 24-ம் தேதி தொழிலாளர் நல இணை ஆணையர் ஜெயசிங்கன் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் 13 சதவிகிதம் கூலி உயர்வு

அறிவிக்கப்பட்டது. உடன்பாட்டில் சிறு விசைத்தறியாளர்கள் சேர்க்கப்படாததால், வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.

தொடர் போராட்டத்தால் தொழிலாளர்கள் பட்டினியால் வாடுகின்றனர். சிலர் வெள்ளையடித்தல், ஓட்டல் வேலை,கட்டடத் தொழில் உள்ளிட்ட வேலைகளுக்கு செல்கின்றனர். வாரந்தோறும் ஊதியம் வாங்கி வாழ்க்கையை நடத்தியவர்களுக்கு குடும்பத்தை கவனிக்க வேறு வழி தெரியவில்லை எனத் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் தொழிலாளர் குடும்பங்கள் பட்டினி கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை கூலி உயர்வு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தொழிலாளர்கள் தரப்பில் பரவலாகப் பேசப்படுகிறது.

1981-ம் ஆண்டு விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி 53 நாள்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதற்கு அடுத்தபடியாக நடைபெறும் நீண்டதொரு போராட்டம் இது. கடந்த ஒருவாரமாக சிறு விசைத்தறியாளர்களும், பாவு கொடுக்கும் தொழிலதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணி வரை எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனே நடவடிக்கை எடுக்குமா என்பதே தொழிலாளர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.