அம்பாசமுத்திரம் வட்டத்தைப் பிரிப்பது எப்போது?
அம்பாசமுத்திரம், டிச. 28:105 கிராமங்களைக் கொண்ட அம்பாசமுத்திரம் வட்டத்தைப் பிரித்து சேரன்மகாதேவியை தனி வட்டமாக உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் வருவாய்த் துறையினர் மத்தியில் எழு


அம்பாசமுத்திரம், டிச. 28:105 கிராமங்களைக் கொண்ட அம்பாசமுத்திரம் வட்டத்தைப் பிரித்து சேரன்மகாதேவியை தனி வட்டமாக உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் வருவாய்த் துறையினர் மத்தியில் எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், சிவகிரி, செங்கோட்டை, தென்காசி, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், ராதாபுரம், நான்குனேரி ஆகிய 11 வட்டங்கள் உள்ளன.
இதில் அம்பாசமுத்திரம் வட்டம் 105 கிராமங்களைக் கொண்ட பெரிய வட்டம். இந்த வட்டத்தைப் பிரிந்து சேரன்மகாதேவியை தனி வட்டமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்றுவரை அது நடைபெறவில்லை.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் பாப்பாக்குடி, கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகள், ஆழ்வார்குறிச்சி, மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி, பத்தமடை, மேலச்செவல், கோபாலசமுத்திரம், முக்கூடல் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
50 சதவிகத பணியாளர்கள் இல்லை: அம்பாசமுத்திரம் வட்டத்தில் கடையம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம், முக்கூடல், பாப்பாக்குடி, சேரன்மகாதேவி, மேலச்செவல் ஆகிய 8 குறுவட்டங்கள் உள்ளன. இவற்றில் 7 வருவாய் ஆய்வாளர்கள் பணி செய்து வருகின்றனர்.
இந்த வட்டத்துக்குள்பட்ட 105 கிராமங்களில் 49 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் உள்ளனர். அவர்களே கூடுதல் கிராமங்களை கவனித்து வருகின்றனர். 80 பேர் பணி செய்ய வேண்டிய நிலையில் 49 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 1.17 லட்சம் குடும்ப அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த வட்டத்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
வட்டாட்சியர் அலுவலகத்திலும் உதவியாளர்கள் பணியிடம் 50 சதவிகிதம்வரை காலியாகவே உள்ளன. குடும்ப அட்டை வேண்டி மாதம் 3,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வருகின்றன. 1,000 பேர் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர். பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிப்போருக்கு பணியாளர்கள் பற்றாக்குறையால் அவை விரைவாக கிடைக்காத நிலை உள்ளது.
காலிப் பணியிடங்களை நிரப்பாதவரை அலுவலர்களுக்கு பணிச் சுமையும், பொதுமக்களுக்கு தாமதமும் தவிர்க்க முடியாதது.
105 கிராமங்களை உள்ளடக்கிய இந்த வட்டத்தை அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி என இரு வட்டங்களாகப் பிரிக்கலாம்.
சேரன்மகாதேவியைத் தலைமையிடமாக கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்தைப் பிரிக்க நடவடிக்கை மேற்கொண்டதால் அங்கு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கட்டடம் கட்டுவதற்கும் நிலமும் ஆர்ஜிதம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ஒன்றியங்களும், பாப்பாக்குடி ஒன்றியத்தில் 3 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த வட்டத்தில் உள்ள கடையம், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியங்கள் ஆலங்குளம் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, குறைந்த கிராமங்களுடன் இயங்கும் ஆலங்குளம் வட்டத்துடன் அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருந்து கடையம், பாப்பாக்குடி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களைப் பிரித்து இணைக்கலாம்.
அண்மையில் பணிச்சுமை காரணமாக உயர் அதிகாரிகளின் நெருக்கடிக்கு ஆளான வட்டாட்சியர் எஸ். தியாகராஜன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வருவாய்த் துறைப் பணியாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
எனவே, தென்மாவட்டங்களில் அதிக கிராமங்களுடன் இயங்கும் அம்பாசமுத்திரம் வட்டத்தை பொதுமக்கள் நலன் கருதியும், அலுவலர்களின் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டும் பிரித்து சேரன்மகாதேவியை தனி வட்டமாக உருவாக்க வேண்டும் அல்லது தொகுதி அடிப்படையில் கிராமங்களைப் பிரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...