கலைஞர் வீட்டுவசதி திட்டத்துக்காக மணல் கொள்ளையை அனுமதிக்க முடியாது

திருநெல்வேலி, ஜன. 8: கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை காரணம் காட்டி மணல் கொள்ளையை அனுமதிக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.  திருநெல்வே
Updated on
1 min read

திருநெல்வேலி, ஜன. 8: கலைஞர் வீட்டுவசதி திட்டத்தை காரணம் காட்டி மணல் கொள்ளையை அனுமதிக்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு கூறினார்.

 திருநெல்வேலியில் சனிக்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

 ஆந்திரம், கேரளத்தில் ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளில் வரைமுறை இல்லாமல் மணல் அள்ளப்படுவதை தடுக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர், பாராட்டுகின்றனர்.

 இந்நிலையில், மணல் அள்ள இயந்திரங்களை அனுமதிக்காததால் கட்டுமானப் பணிகளும், தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். மேலும், அரசு திட்டமான கலைஞர் வீட்டு வசதி திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது பிரச்னையைத் திசை திருப்பும் செயலாகும். தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றால் நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதைவிடுத்து என் மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கதக்கது. நான் கடந்த 1943 ஆம் ஆண்டிலேயே அரசியலுக்கு வந்தவன். என்னை எவரும் பயமுறுத்த முடியாது.

 கலைஞர் வீட்டுவசதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு போதாது என்று போராடி கூடுதல் நிதியைப் பெற்றுக் கொடுத்தது நாங்கள்தான். அந்த திட்டத்திற்கு நாங்கள் எப்படி இடையூறாக இருப்போம். கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை காரணம் காட்டி மணல் கொள்ளையை அனுமதிக்க முடியாது.

 எனவே, மணல் அள்ளுவதில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அரசு முறையாக அமல்படுத்த வேண்டும். மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். கட்டுமானச் செலவு உயருவதற்கு மணல் மட்டும் காரணம் அல்ல. சிமெண்ட் விலை |180-ல் இருந்து தற்போது |300-க்கு உயர்ந்துள்ளது. இதற்கு யார் பொறுப்பு? எனவே, அரசு மக்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

 மணல் உரிமையாளர்களின் பிரசாரத்துக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நல்லகண்ணு.

 பேட்டியின்போது மாவட்டச் செயலர் ஆர். சண்முகவேல், மாநில குழு உறுப்பினர் ஏ. சேவியர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com