திருநெல்வேலி, ஜன. 8: சட்ட மேலவைத் தேர்தலுக்கான தமிழ்நாடு தெற்கு ஆசிரியர் தொகுதி வேட்பாளராக ஏ. ஜேம்ஸ் வில்லியம் சனிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டார்.
அகில இந்திய பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரான இவர், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 35 ஆண்டுகளாக ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியராகவும், துறைத் தலைவராகவும் பணியாற்றியவர். 1979 முதல் "மூட்டா'வில் கடந்த 31 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ள இவர், அதன் பொதுச்செயலராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அண்மையில் வங்கதேசத்தில் நடைபெற்ற அகில உலக ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநாட்டில் அதன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்துக்கு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ஜி. சுப்பையா தலைமை வகித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் பேசினர். மூட்டா பொதுச்செயலர் டி. மனோகரா ஐஸ்டஸ் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி உமையொருபாகன் நன்றி கூறினார்.