"ஒளியிழக்கும்' தீப்பெட்டித் தொழில்!

கோவில்பட்டி, ஜன. 17:  நலிந்து வரும் தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தமிழகத்தில் தூத்துக
Updated on
1 min read

கோவில்பட்டி, ஜன. 17:  நலிந்து வரும் தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் வேலூர்  மாவட்டம் குடியாத்தம், காவேரிபட்டணம் ஆகிய பகுதிகளில் தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. கையால் தீப்பெட்டி தயாரிக்கும் சுமார் 7 ஆயிரம் ஆலைகள், 500-க்கும் மேற்பட்ட பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகள், சுமார் 20-க்கும் மேற்பட்ட முழுமையான இயந்திர தீப்பெட்டி ஆலைகள் இதில் அடங்கும்.

 இந்த ஆலைகளில் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.

  தீப்பெட்டித் தொழில் கடந்த 3 ஆண்டுகளாக நலிந்து கொண்டே வருகிறது.  மூலப்பொருள்களான அட்டை, குச்சி, மெழுகு, குளோரைட், பேப்பர் போன்றவற்றின்  விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் ஆள்பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால், கையால் தயாரிக்கப்படும் பல தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் நிலைக்குச் சென்றுவிட்டன.

 பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் முதலீட்டாளர்கள் முழுமையான இயந்திர  தீப்பெட்டி ஆலைகள் மூலம் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களைக்  கொண்டு அதிக அளவில் தீப்பெட்டி தயாரித்து, வெளிமாநில சந்தையில் போட்டி போட்டு விலை குறைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

 இவர்களுடன் போட்டியிடும் வகையில், சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பலர்  சேர்ந்து, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் உதவியுடன் பகுதி இயந்திர ஆலைகளை அமைத்து வருகின்றனர்.

 ஆனால், இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. கையால் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டிக்கு மத்திய கலால் வரி இல்லை. அதேநேரம், முழு இயந்திர ஆலைகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கு விதிக்கப்படும் கலால் வரிக்கு இணையாக பகுதி இயந்திர ஆலைகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கும் 10 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை நீக்க வேண்டும் என பகுதி இயந்திர தீப்பெட்டி  ஆலை உரிமையாளர்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 தீப்பெட்டித் தொழிலைப் பாதுகாக்க பகுதி இயந்திர தீப்பெட்டி ஆலைகளுக்கு  விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத கலால் வரியை ரத்து செய்ய வேண்டும்; ஏற்றுமதி  செய்யும் தீப்பெட்டிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7 சதவீத ஊக்கத்தொகையை  15 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதே தீப்பெட்டி உற்பத்தியாளர்களின்  கோரிக்கை. இந்த அறிவிப்புகள் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டிலாவது  இடம்பெற  வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com