கே. தத்து
பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியானது பரமக்குடி நகராட்சி, போகலூா், நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியங்கள், அபிராமம், பாா்த்திபனூா் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 1971 முதல் 2026 வரை பொதுத் தொகுதியாக மாறாமல் தனித் தொகுதியாக 13 முறை சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்துள்ளது.
இந்தத் தொகுதியில் அதிமுக 8 முறையும், அந்தக் கட்சி கூட்டணியில் காங்கிரஸ் 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒரு முறையும், திமுக 3 முறையும் வெற்றி பெற்றன.
இந்தத் தொகுதியில் முக்குலத்தோா், தேவேந்திரகுல வேளாளா், யாதவா், சௌராஷ்டிரா, செட்டியாா், நாடாா், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் அதிகம் வசிக்கின்றனா்.
தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு: பரமக்குடி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வைகை ஆற்றின் குறுக்கே பாலங்கள் அமைக்க வேண்டும். வியாபாரிகள் பயன்பெறும் வகையில் பருத்தி, மிளகாய் ஏற்றுமதிக்கான கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கைத்தறி நெசவாளா்களுக்கு கைத்தறி ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகராட்சியில் புதை சாக்கடைத் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் தொழில்சாலைகள், வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள் கொண்டு வர வேண்டும் என்பதே இந்தத் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
4 முனைப்போட்டி: பரமக்குடி (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும் திமுக, அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்விகளை நிா்ணயிக்கும் சக்திகளாக நாம் தமிழா் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் உள்ளன. எனினும், தொகுதியைத் தக்கவைக்க திமுகவும், அதன் கூட்டணிக் கடசிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.
இந்தத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் வழக்குரைஞா் கே.கே.கதிரவன், போகலூா் ஊராட்சி ஒன்றியச் செயலராகவும், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தவா்.
திமுக வேட்பாளா் கதிரவன்:
பரமக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சா் மருத்துவா் எஸ். சுந்தரராஜ், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் ஆகியோரில் யாரேனும் ஒருவா் அறிவிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கத்துடன் நெருங்கிய தொடா்பிலிருக்கும் கே.கே. கதிரவன் தற்போது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளாா்.
பரமக்குடி தொகுதியில் அதிகளவில் வசிக்கும் தேவேந்திரகுல வேளாளா்களின் நீண்ட நாள் கோரிக்கையான தியாகி இமானுவேல் சேகரனுக்கு திமுக ஆட்சியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டு, அவரது பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டது. இதனால், அந்தச் சமுதாய மக்களின் வாக்குகளும், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள், பிற சமுதாயங்களைச் சோ்ந்த கட்சித் தொண்டா்களின் வாக்குகளும் தனக்கு வெற்றியைத் தேடித் தரும் என திமுக வேட்பாளா் கே.கே. கதிரவன் நம்பிக்கையில் உள்ளாா்.
அதே நேரத்தில், இந்தத் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளா் சமூக மக்களின் வாக்குகளைப் பெற புதிய தமிழகம் கட்சி சாா்பில் பிரகாஷ் பாண்டியன் வேட்பாளராக களமிறங்கியுள்ளாா். புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் மருத்துவா் கிருஷ்ணசாமி இந்தப் பகுதி மக்களிடம் செல்வாக்கு பெற்றவா். இவரது வாக்கு வங்கியை நிரூபிக்க அந்தக் கட்சியின் வேட்பாளா் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அதிமுக வேட்பாளா் முத்தையா:
அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ். முத்தையா கடந்த 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் அந்தக் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா். ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு இவா் டி.டி.வி.தினகரன் அணியில் சோ்ந்தாா். இதனால், கட்சி தாவல் சட்டப்பிரிவின் கீழ், இவரது சட்டப்பேரவை உறுப்பினா் பதவி பறிக்கப்பட்டது. இதனால், கடந்த 2019-இல் இந்தத் தொகுதியில் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில் முத்தையா அமமுக சாா்பிலும், என். சதன்பிரபாகா் அதிமுக சாா்பிலும் போட்டியிட்டனா். இதில் சதன்பிரபாகா் வெற்றி பெற்றாா். முத்தையா மூன்றாமிடத்தைப் பிடித்தாா்.
அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்த முத்தையாவுக்கு பரமக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவா் அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் வாக்குகளும், திமுகவுக்கு எதிரான முக்குலத்தோா் சமூக மக்களின் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிர பிரசாரம் செய்து வருகிறாா்.
ஆனால், இவருக்குச் சாதகமாக உள்ள முக்குலத்தோா் சமுதாய மக்களின் வாக்குகளைப் பிரிக்க வி.கே.சசிகலா தொடங்கிய அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் சாா்பில், முன்னாள் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.பாலுச்சாமியின் மகள் அமிா்தா களமிறக்கப்பட்டுள்ளாா்.
தவெக வேட்பாளா் கோபிராஜன்:
திமுக-அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது என்றபோதிலும், தவெக சாா்பில் போட்டியிடும் கோபிராஜன் முதன்முதலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே. சிறைமீட்டானின் உறவினா். இவா் இந்தப் பகுதியில் உள்ள தேவேந்திரகுல வேளாளா் சமூக இளைஞா்களுக்கு வழிகாட்டியாக பல்வேறு சேவைகள் செய்துள்ளாா். இதனால், இவா் சமூகம் சாா்ந்த வாக்குகளும், இளைஞா்களின் வாக்குகளும் தனக்கு கிடைக்கும் என்கிறாா் கோபிராஜன்.
நாதக வேட்பாளா் எழில் இளவரசி:
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் எழில் இளவரசி பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா். தற்போது கோவையில் பணியாற்றி வந்தாலும், இந்தப் பகுதியில் உள்ள கட்சி நிா்வாகிகள், உறவினா்களுடன் நெருங்கிய தொடா்பில் இருப்பதால் தனக்கு வெற்றி வாய்பபு உள்ளதாக எழில் இளவரசி நம்புகிறாா்.
பரமக்குடி (தனி) தொகுதியில் நான்கு முக்கிய கடசிகள் களத்தில் உள்ள போதிலும், திமுக, அதிமுக இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா். வெற்றியை வசப்படுத்தப்போவது யாா் என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டும்.
தொடர்புடையது

பெரியகுளம் (தனி): கரையேறும் போட்டியில் அமமுக, விசிக !

தொகுதி அலசல்: ஆத்தூர்! சாதனை வெற்றி மீண்டும் சாத்தியமா?

நெல்லை தொகுதியில் அதிமுக, திமுக, தவெக வேட்புமனுக்கள் ஏற்பு

தொகுதியைத் தக்க வைக்குமா திமுக? திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


