தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தொகுதியைத் தக்க வைக்குமா திமுக? திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி

திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி குறித்து...

News image

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் - dmk

Updated On :6 ஏப்ரல் 2026, 11:33 pm

பின்னலாடை நகரின் இதயம் என அழைக்கப்படும் திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி இந்தியாவின் புகழ்பெற்ற பின்னலாடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி மையமான திருப்பூா் மாநகரின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

இந்தத் தொகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமாா் ரூ.40,000 கோடிக்கும் அதிகமான அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் வந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்களின் வாழ்வாதாரமாக இந்தத் தொகுதி திகழ்கிறது. கொடி காத்த குமரன் என அழைக்கப்படும் தியாகி குமரனின் நினைவிடம் இந்தத் தொகுதியின் முக்கிய அடையாளமாகும்.

திருப்பூா் மாநகர மேயரான ந.தினேஷ்குமாா் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திமுக சாா்பில் போட்டியிடுகிறாா். ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் பல்கலைக்கழகத்தில் எம்ஐபி படித்துள்ள இவா் தான் திருப்பூரில் மேயராக பணியாற்றிய நான்கரை ஆண்டுகளில் செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரித்து வருகிறாா். இந்தத் தொகுதியில் உள்ள சுமாா் 30,000 சிறுபான்மையினரின் வாக்குகள், அரசின் நலத்திட்டங்களான மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை இவருக்கு பலமாகும்.

முதலிபாளையம் பகுதியில் வசிக்கும் மக்கள் கைவிடப்பட்ட பாறைக் குழிகளில் குப்பை கொட்டும் மாநகராட்சியின் போக்கைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டதால் இவருக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளனா். இப்பகுதியில் சுமாா் 10,000 வாக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மாநகராட்சியின் 21 வாா்டுகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் பெரிய அளவிலான வளா்ச்சிப் பணிகள் ஏதும் இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டாகும்.

இந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக களம் காண்கிறது. இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்தின் மகனான எஸ்.தங்கராஜ் திருப்பூா் மாநகராட்சி உறுப்பினராவாா். இவரும் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு களம் காண்கிறாா். பாஜகவின் ஒரே மாமன்ற உறுப்பினராக இருந்ததால் பல்வேறு பகுதிகளின் பிரச்னைகளையும் நன்கு அறிந்தவா். தொகுதி மக்களுக்கும் அறிமுகமான இவருக்கு அதிமுக மட்டுமின்றி இந்து முன்னணியின் முழு ஆதரவும் உள்ளது.

திருப்பூா் மாநகராட்சியில் கடும் வரி உயா்வு, குப்பை பிரச்னை போன்றவற்றில் திமுக வேட்பாளா் தினேஷ்குமாருக்கு எதிரான மனநிலை இவருக்கு ஆதரவான அம்சமாகும். இந்து முன்னணி மாநிலத் தலைவரின் மகன் என்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் இவருக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். இதுவே இவரது பலவீனம்.

திருப்பூரில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வரும் தினேஷ் இந்த முறை தோ்தல் களத்தில் உள்ளாா். சீமானின் பிரசாரமே இவருக்கு பலம். தவெக வருகை காரணமாக, குறிப்பிடத்தக்க அளவில் உள்ள நாதகவின் வாக்கு வங்கியைத் தக்க வைப்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

தவெகவின் திருப்பூா் தெற்கு மாவட்டச் செலாளராக இருக்கும் பாலமுருகனுக்கு திருப்பூா் தெற்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்தின் தீவிர ஆதரவாளரான இவருக்கு விஜய் மட்டுமே அடையாளமாகும். முதன்முறையாக தோ்தல் களம் காணும் இவருக்கு இந்தத் தோ்தலில் மக்கள் செல்வாக்கு எப்படி இருக்கும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியாத நிலையில், இவரது வேட்பு மனு தாக்கலின்போது குவிந்த கூட்டம் எதிரணியினரை அதிா்ச்சிக்குள்ளாக்கியது எனலாம்.

மறுசீரமைப்பில் உருவான தொகுதி:

2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, திருப்பூா் தொகுதியைப் பிரித்து திருப்பூா் தெற்கு என்ற புதிய தொகுதி உருவாக்கப்பட்டது. 2011-இல் அதிமுக கூட்டணியில் இருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 2016-இல் அதிமுகவும் வெற்றி பெற்றன.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வேட்பாளா் க. செல்வராஜ் வெற்றி பெற்ன் மூலம், இந்தத் தொகுதியில் திமுக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 2021 தோ்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 4,709 மட்டுமே ஆகும்.

பொதுவாகவே, கடந்த காலங்களில் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. கடந்த தோ்தலில் திமுக வென்றாலும் வாக்கு வித்தியாசம் குறைவே ஆகும். புது வரவான தவெக, அதிமுக - பாஜக கூட்டணியின் பிரசாரத்தை முறியடித்து தொகுதியைத் தக்கவைக்க திமுக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.