கோவில்பட்டி, ஜூன் 8: கோவில்பட்டி குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு தரும் தனிக் குடிநீர்க் குழாய் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவில்பட்டியில் கடந்த சில ஆண்டுகளாôக குடிநீர்ப் பிரச்னை இருந்து வருகிற்து. இப்போது, நகரில் 15 நாள்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கோவில்பட்டிக்கு வரும் குடிநீர்க் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதும், மின்தடையால்
குடிநீரை நீரேற்று நிலையங்களுக்கு பம்பிங் செய்து அனுப்ப முடியாததுமே குடிநீர் பிரச்னைக்கு காரணங்கள் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு வந்தது.
ஆனால் இதில் உண்மையில் இல்லை. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட கோவில்பட்டி குடிநீர்த் திட்டம் காலாவதியாகி விட்டதுதான் இதற்கு முக்கிய காரணம்.
குடிநீர் விநியோகிப்பதற்காக 1976-ம் ஆண்டு சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கங்கைகொண்டான், கயத்தாறு வழியாக கோவில்பட்டிக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.
இதன்மூலம் கோவில்பட்டி மட்டுமல்லாமல் எட்டையபுரம், சாத்தூர், கழுகுமலை போன்ற பகுதிகளும், 27 வழியோரக் கிராமங்களும் பயன்பெற்று வந்தன.
2007-ம் ஆண்டு பழைய குடிநீர்த் திட்டம் காலாவதியாகிய உடன் அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கோவில்பட்டிக்கான தனிக் குடிநீர்த் திட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
2007-ம் ஆண்டு கணக்கின்படி புதிய திட்டத்துக்கான செலவு ரூ.36 கோடியாகும் என மதிப்பீடு செய்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அனுப்பினர்.
நிதி ஒதுக்கப்படாததால் மீண்டும் 2008-ம் ஆண்டு அன்றைய நிலவரப்படி ரூ.42 கோடி தேவை என மறுமதிப்பீடு செய்து அதிகாரிகள் அறிக்கையை அனுப்பினர்.
ஆனால் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் 2009-ம் ஆண்டு திட்ட மதிப்பு ரூ.50.16 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில், கோவில்பட்டி நகருக்கு தனிக் குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இதையடுத்து ரூ. 82 கோடிக்கான நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த நிதி ஒதுக்கீடு மற்றும் பணி ஏதும் இன்று வரை தொடங்கப்படவில்லை.
அதுபோல, அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று, மத்திய ஆட்சி அமைக்கப் பெற்றவுடன் கோவில்பட்டியில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார். ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றபடவில்லை.
இந்நிலையில் கோவில்பட்டி மக்கள் நிலத்தடி நீர் இல்லாமல் சீவலப்பேரி குடிநீரும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
தனி குழாய் அமைத்து குடிநீர்த் திட்டம் வரும்பட்சத்தில் ஒரு நாள்விட்டு ஒருநாள் குடிநீர் தடையின்றி மக்களுக்கு கிடைக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.
எனவே, புதியதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு கோவில்பட்டி நகர மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர்ப் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.