திருநெல்வேலி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ஆட்சியர் சி. சமயமூர்த்தி வேதனை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 9-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தென்காசி மற்றும் புளியங்குடியைச் சேர்ந்த இரு மாணவிகள்
குறைந்த மதிப்பெண்கள் பெற்ற காரணத்தால் தற்கொலை செய்து கொண்டது குறித்து தெரியவருகிறது. இது மாவட்ட நிர்வாகத்துக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. படிக்காதவர்கள் மேதைகளாகி நாட்டுக்கு சாதித்துள்ளதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சாதிப்பதற்கு இன்னும் பல வழிகள் உள்ளதைக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கவனத்தில் கொண்டு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை மாற்றி கொள்ள வேண்டும்.
குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டோம் என்று வருத்தப்பட வேண்டாம். அவர்களுக்கும் நல்ல சந்தர்ப்பங்கள் காத்திருக்கிறது. மாணவர்கள் இந்நாட்டின் வருங்காலத் தூண்கள் என்பதை மனதில் கொண்டு தடைகளைப் படிக்கட்டுகளாக நினைத்து கடுமையாக உழைத்து பெற்றோருக்கும், மாவட்டத்துக்கும், மாநிலத்துக்கும் பெருமை சேர்க்க வேண்டும். குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர் நல்ல புத்திமதிகளைக் கூறி, நல்வழிப்படுத்தி,அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியாகவுள்ளது. இதை மனதில் கொண்டு குறைந்தளவு மதிப்பெண்கள் பெறுவோரின் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்றார் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









